சென்னை: அரசியல் பயணத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற கூற்றுத் தமிழகத்தில் தற்போது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. யாரும், ஏன் அவர் பணியாற்றி வந்த காங்கிரஸ் கட்சியே சற்றும் எதிர்பாராத நேரத்தில், பாஜகவில் இணைந்து தன் விருப்பத்தைத் தீர்க்கமாக வெளிப்படுத்தியுள்ளார் விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி.
முன்னதாக தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்குக் கூட வராமல் டெல்லியில் முகாமிட்டிருந்தது குறித்து தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை விட்டு அவர் என்றைக்குமே செல்லமாட்டார். அந்த அளவிற்குக் காங்கிரஸ் அவருக்குச் செய்திருக்கிறது, இனியும் செய்யும். ஒரு வழக்கிற்காக விஜயதாரணி டெல்லி சென்றுள்ளார் என்று பதிலளித்து ஈரம் காயும் முன்னரே விஜயதாரணி எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியிலிருந்து நீங்கி பாஜகவில் இணைந்துள்ளார்.
காங்கிரஸில் குடியிருந்து பாஜகவிற்குக் குடியேறிய விஜயதாரணி வரலாறு:"தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி" போன்ற தமிழ் சிறப்புமிக்க பாடல்களை இயற்றிய நாஞ்சில் நாட்டுக் கவிஞரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தியே விஜயதாரணி. 1969ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி மருத்துவக் குடும்பத்தில் பிறந்தவர் தான் விஜயதாரணி. இவரின் தாயார் பகவதி 1977ஆம் ஆண்டில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்ததனால், சிறுவயது முதலே அரசியல் அறிவும், ஆர்வமும் கொண்டுள்ளார்.
ஒன்பது வயதில் தந்தை இறந்துவிட, அதன்பின் தாயின் அரவணைப்பிலே கல்லூரிப் படிப்பை முடிக்கிறார். 1987ஆம் ஆண்டு சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாணவர் காங்கிரஸில் இணைந்து, தனது 25ஆவது வயதில் இளைஞர் காங்கிரஸில் அதீத ஆர்வம் கொண்டு மாணவர்களுக்கான பணியில் திறம்படச் செயல்பட்டு வந்தார். கட்சிப்பணியில் தீவிரமாகப் பணியாற்றி வந்த விஜயதாரணி கணிப்பொறியாளரான சிவகுமார் கென்னடி என்பவரைத் திருமணம் செய்கிறார். விஜயதாரணி மற்றும் சிவகுமார் தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ள நிலையில், கணவர் சிவகுமார் கென்னடி உடல்நலக்குறைவால் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார்.
காங்கிரஸ் பாரம்பரியம் நிறைந்த விஜயதாரணி குடும்பம்:விஜயதாரணியின் தாயார் பகவதி காங்கிரஸ் கட்சியில் முழுநேர நிர்வாகியாகப் பணியாற்றியவர். மருத்துவரான பகவதி, 1977ஆம் ஆண்டில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ஏன் இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸுக்கும் பகவதி அம்மையாருக்குமான நெருக்கத்தை உணர்த்துகிறது ராஜீவ் கொலைச் சம்பவம். ராஜீவ் கொலை சம்பவத்தன்று விஜயதாரணியின் தாயாரான பகவதியும் அந்தக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அன்று நடந்த அந்தக் கோரச் சம்பவத்தில் பகவதியும் காயமடைந்துள்ளார்.