சென்னை:தன்பாலின மற்றும் பால் புதுமையின LGBTIQA+ மக்கள் தங்கள் பெருமைமிகு மாதமாக கருதும் ஜூன் மாதத்தில் பிரம்மாண்டமான பேரணியினை உலகெங்கும் நடத்தி வருகின்றனர். இந்த மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள LGBTIQA+ மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு எதிரான அநீதிகளையும் கண்டித்தும் பேரணி நடத்துவார்கள்.
அந்த வகையில் சென்னையில் 'வானவில் கூட்டணி' என்ற அமைப்பு ஆண்டுதோறும் ஜூன் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானவில் சுயமரியாதை பேரணியை நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டுக்கான வானவில் சுயமரியாதை பேரணி சென்னையில் நடைபெற்றது.
இந்தப் பேரணி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து தொடங்கி, சிந்தாதிரிப்பேட்டை லேங்க்ஸ் தோட்ட சாலை சந்திப்பில் நிறைவடைந்தது. இதில் சென்னை மட்டுமின்றி, பிற மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்த பேரணியில் பங்கேற்ற அனைவரும் "Happy Pride" என்றும் எங்கள் பாலினம் எங்கள் உரிமை" என்றும் முழக்கங்களை எழுப்பினர். இது குறித்து பேரணியில் பங்கேற்ற மான்மிதா கூறுகையில், "LGBTIQA+ மக்களுக்கு பலர் ஆதரவு தந்திருக்கக் கூடிய நிலையில் இன்னும் பல மக்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.
மனரீதியான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இங்குள்ள அனைவரும் இந்தியாவில் தான் பிறந்துள்ளோம் ஆனால் ஏன் எங்களை வித்தியாசமாக பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. தவறான கருத்துக்களை சொல்பவர்கள் அனைவரும் என்ன கருத்துகள் வேண்டுமானாலும் சொல்லுங்கள் ஆனால் நாங்கள் எங்களுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
நாங்கள் இவ்வாறு எப்போதும் சந்தோஷமாகத்தான் இருப்போம். இந்த நாள் மிக முக்கியமான நாள் எங்களுடைய சுதந்திரத்தை வெளிப்படையாக நாங்கள் கொண்டாடும் நாள் இது அதுவும் சென்னையில் நாங்கள் எவ்வாறு கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று பேசினர்.
இதனை தொடர்ந்து சென்னை சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறுகையில், "முதல் முறையாக இந்த பேரணியில் பங்கேற்று உள்ளேன். LGBTIQA+ பற்றி பலருக்கும் பல கருத்துகள் இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காக இந்த பேரணியில் பங்கேற்று உள்ளேன்" என்றார்.
சென்னை மாநகராட்சி ஆதரவு:LGBTIQA+ மக்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக நேற்று ரிப்பன் மாளிகை வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் "ஜூன் மாதத்தில் சர்வதேச ப்ரைட் மாதத்தை நிறைவு கூறவும், LGBTIQA+ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனின் ரிப்பன் மாளிகை வானவில் வண்ணங்களில் ஒளிர்கிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:உப்பு அதிகமாக சேர்ப்பதால் இவ்வளவு பாதிப்புகளா? மருத்துவர்கள் கூறுவது என்ன?