சேலம்:சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பக்கநாடு ஊராட்சியைச் சேர்ந்த கோம்பை காடு பகுதியில் சிறுத்தை நடமாடி வருவதாக விவசாயிகள் அடுக்கடுகான புகார்களை தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதையன் என்பவரது வீட்டில் கட்டி இருந்த பசு மாட்டை சிறுத்தை இழுத்துச் சென்று அடித்துக் கொன்றது.
இது குறித்து தகவலின் பெயரில் வனச்சரக அலுவலர்கள் அந்தப் பகுதியில் 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மேலும் சிறுத்தையைப் பிடிக்கும் வகையில் தோட்டத்தில் கூண்டு வைத்துள்ளனர்.
பின்னர் கடந்த 14ஆம் தேதி ட்ரோன் மூலமாக கண்காணித்தனர். ஆனால் சிறுத்தை சிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று ஆவடத்தூரை சேர்ந்த பூபாலன் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தது.
இதுகுறித்து தகவலின் பெயரில் வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் அங்கு பதிவாகியிருந்த கால் தடங்களை ஆராய்ந்ததில் சிறுத்தை நடமாட்டம் உறுதியானது. இதனை அடுத்து சிறுத்தை பிடிக்கும் முயற்சியில் அப்பகுதியில் கூடுதலாக கூண்டுகள் வைத்து அதில் ஆடு, மாடு மாமிசத்தைக் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.