தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அடுத்துள்ள புளியங்குடி எலுமிச்சை நகரம் என்று அழைக்கப்படுகிறது. இதில், புளியங்குடி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியிலேயே எலுமிச்சை சந்தையும் உள்ளது. எலுமிச்சை விற்பனைக்காக மட்டுமே ஒரு சந்தை செயல்பட்டு வருவது புளியங்குடியில் மட்டுமே.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதனால் வெப்பத்தில் தவிக்கும் மக்கள் தாகத்தை தணிப்பதற்காக இளநீர், மோர், கரும்பு ஜூஸ், சர்பத், எலுமிச்சை பழரசம் உள்ளிட்டவற்றை அருந்துகின்றனா்.
விளைச்சல் குறைவு: புளியங்குடி எலுமிச்சை சந்தைக்கு எலுமிச்சை வரத்து குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சை பழங்கள் அதிகளவில் சேதம் அடைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால், போதிய விளைச்சல் இல்லாமல் குறைவாகவே எலுமிச்சை பழங்கள் புளியங்குடி சந்தைக்கு வருகின்றன.
விலை உயர்வு:கோடை வெயிலின் காரணத்தினால், எலுமிச்சை பழத்தின் வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகமாக உள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சைப்பழம் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.