திருநெல்வேலி:வழக்கறிஞர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டதாக கூறி, காவல்துறையை கண்டித்து பாளையங்கோட்டை- திருச்செந்தூர் சாலையில் வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், அவ்வழியாகச் சென்ற சபாநாயகர் காரை மறித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பெட்ரின் ராயன் என்பவரை கடந்த மாதம் ஹைகிரவுண்ட் பகுதியில் வைத்து மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முள்ளான் சையத் அலி உட்பட பலரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், வழக்கறிஞர்
நயினா முகமது மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பொய் வழக்கு போட்டு காவல்துறை வழக்கறிஞரை கைது செய்ததாக குற்றம் சாட்டி திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் நெல்லை மாவட்ட வழக்கறிஞர் சங்கச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிடாமல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாநகர காவல்துறை துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சோரா தலைமையிலான போலீசார் மீண்டும் வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்களது கோரிக்கைக்கு உடன்படாததால் போராட்டம் தொடர்ந்தது. மதிய உணவு நேரத்தை தாண்டியதால் வழக்கறிஞர்கள் மதிய உணவு ஆர்டர் செய்து சாலையிலேயே அமர்ந்து உணவு அருந்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையம் செல்வதற்காக நீதிமன்றம் வழியாகச் சென்ற சபாநாயகர் வாகனத்தை, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.