சென்னை: தமிழர்களின் முக்கிய பண்டிகையாக பார்க்கப்படும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு மக்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதாவரம் பேருந்து நிலையத்திலிருந்து ஜனவரி 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சுமார் 14,104 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் கிளான்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் மட்டும் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட அரசு சிறப்பு பேருந்துகளில் மட்டும் சுமார் 4,13,215 பேர் பயணம் செய்து உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதலாக முன்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக கூடுதல் ஏடிஎம் இயந்திரங்கள், அனைத்து நடைமேடைகள் அருகிலும் குடிநீர் வசதிகள், மருத்துவ முகாம், ஓய்வு அரைகள் மற்றும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக பாடல், இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளதாகவும், பேருந்துகள் அனைத்து பகுதிகளுக்கும் கிடைப்பதாகவும், சில பயணிகள் தெரிவித்த நிலையில், சில பயணிகள் சென்னையில் உள்ள பல்வேறு நகரங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருவதற்கு சிரமமாக இருப்பதாகவும் இதனால் பாதி பேருந்து சேவைகளை கோயம்பேட்டில் இருந்தும், பாதி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்தும் இயக்க வேண்டும் என தெரிவித்தனர்.