தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நவக்கிரக ஸ்தலங்களுக்கு சிறப்பு பேருந்து வசதி 750 ரூபாய் கட்டணத்தில், 9 கோயில்களையும் ஒரே நாளில் சென்று தரிசனம் செய்து திரும்பும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பயணிகளின் வரவேற்பைத் தொடர்ந்து கூடுதலாக குளிர்சாதன வசதி பேருந்து இயக்கப்பட்டது.
முதலில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் இயக்கப்பட்ட இந்த பேருந்து சேவை, தற்போது நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பேருந்து சேவையினால், தங்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தனியார் சுற்றுலா மோட்டார் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சுற்றுலா மோட்டார் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் கூட்டமைப்பு சார்பில் அடுத்த கட்ட நகர்வு குறித்த ஆலோசனை கூட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:" கொலை மிரட்டல் புகார்களுக்கு நடவடிக்கை இல்லை" - தர்ணா போராட்டத்தில் இறங்கிய அதிமுக எம்பி சி.வி சண்முகம்!
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தனியார் சுற்றுலா மோட்டார் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குகநாதன் கூறுகையில், “கும்பகோணம் நகரில் உள்ள முக்கிய ஸ்தலங்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வாரத்தில் மூன்று நாட்கள் சுற்றுலா வரும் வெளியூர் மக்களை நம்பியே கும்பகோணத்தில் உள்ள சுற்றுலா மோட்டார் வாகன டாக்ஸி, வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் 500 வாகனங்களை வைத்து, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த புதிய சுற்றுலா பேருந்து வசதியினால், தங்களது தொழில் முற்றிலுமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முடங்கியுள்ளது. வங்கிக் கடனை திரும்பச் செலுத்த முடியாமல் உள்ளது. குறைந்தபட்சம் வட்டித்தொகையைக் கூட திரும்பச் செலுத்தாததால், பிற இடங்களில் கடன் வாங்கக்கூட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அரசின் 11 துறைகள் சார்ந்த உயர் அலுவலர்களுக்கு கோரிக்கை மனு அளித்தும், மக்கள் பிரதிநிதிகள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை நேரில் சந்தித்தும் முறையிட்டோம். முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம். எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற ரீதியில் விரைவில் இப்பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.