தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம்,திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு, நேற்று (ஜன. 30) தஞ்சை மாவட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளூர் விடுமுறை அறிவித்தார்.
இந்நிலையில் விடுமுறையையொட்டி, கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் பிபிஏ(BBA) மாணவர்கள் 14 பேர் ஒன்றிணைந்து தனிப்பட்ட முறையில், காரைக்காலுக்குச் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது கடலில் அனைவரும் ஆனந்தமாகக் குளித்து, விளையாடி மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் ஹேமமாலினி என்ற கல்லூரி மாணவி கடலில் குளிக்கும் போது, எதிர்பாராவிதமாக கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்களான அபிலாஸ் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரும் ஹேமமாலினியைக் காப்பாற்றும் நோக்கில் கடலுக்குள் சென்ற போது, அவர்களும் கடல் அலையில் சிக்கி மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் தலைமையில் கடலில் குளிக்கச் சென்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இந்த தேடுதல் பணியில், ஹேமமாலினியின் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஹேமமாலினியின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து, காப்பாற்றச் சென்ற மாணவர் ஜெகதீஸ்வரன் உடல் மீட்கப்பட்டது. மேலும், மாயமான மாணவர் அபிலாஸ் தேடப்பட்டு வரும் நிலையில், மூன்று பேரும் உயிரிழந்து விட்டதாக, சக மாணவர்கள் பேனர் வைத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.