சேலம்:பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், சேலத்தில் இன்று (ஏப்.25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "ஜாபர் சாதிக்கின் கைதுக்குப் பிறகு, போதைப்பொருட்கள் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகத் தெரியலாம். ஆனால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோயில்கள் அருகாமையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகள் உள்பட தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் சர்வ சாதாரணமாக போதைப்பொருட்கள் விற்பனையாகிறது.
இன்னும் சொல்லப்போனால், கிராமங்களில் உள்ள சந்தைகளில் கூட அதிகாலை 4 மணி முதல் போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. காய்கறியினை வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது, கஞ்சா பொட்டலம் வாங்கிச் செல்லும் சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவிவருகிறது.
இதைக் கட்டுப்படுத்த வேண்டியது காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர். ஆனால், இன்றைய சூழலில், அவரது கையில் ஆட்சி இருக்கிறதா? அவரது கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.