தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ரயில்வே நிலையம் மதுரை ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரயில்வே நிலையங்களில் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மற்றும் தென்காசி என 4 மாவட்ட மக்கள் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தினை பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, ரயில் பயணிகள் கட்டணத்தில் அதிகளவில் கோவில்பட்டி ரயில்வே நிலையம் வருமானத்தினை ஈட்டி வருகிறது. இவ்வாறு அதிகமாக மக்கள் வரும் ரயில்வே நிலையத்தில் முன்பதிவு செய்ய மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற ஒரு கவுண்டர் தான் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டிக்கெட் கவுண்டர்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் சமந்தபட்ட அதிகாரிகள் தற்போது வரையிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க, ஏற்கனவே இருக்கும் ஒரேயொரு டிக்கெட் கவுண்டரில் வடமாநிலத்தினைச் சேர்ந்த பணியாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர். இதுமட்டும் அல்லாது, அவருக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் எதுவும் தெரியவில்லை என்றும் ஹிந்தி மட்டுமே தெரியும் என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், இன்று (பிப்.16) வழக்கம் போல வடமாநிலத்தினைச் சேர்ந்த பணியாளர் டிக்கெட் கவுண்டரில் இருந்துள்ளார். டிக்கெட் மற்றும் தட்கல் மூலமாக டிக்கெட் முன் பதிவு செய்ய வந்தவர்கள் கூறிய விபரங்களைப் புரிந்து கொள்ள முடியாமல், "ஹிந்தியில் பேசினால் மட்டும் தான் விரைந்து தன்னால் டிக்கெட் கொடுக்க முடியும், இல்லை என்றால் மெதுவாகத்தான் தருவேன்" என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.