தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நகராட்சி வேண்டாம்; ஊராட்சியே போதும்" - கோவை, கிட்டாம்பாளையம் கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம்! - கருமத்தம்பட்டி நகராட்சி

Kittampalayam Grama Sabha Meeting: கோவை, கிட்டம்பாளையம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, விரைவில் கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாகக் கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Kittampalayam Grama Sabha Meeting
கிட்டாம்பாளையம் கிராமசபை கூட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 3:38 PM IST

கோயம்புத்தூர்:75ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் சிறப்புக் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில், கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கிட்டாம்பாளையம் ஊராட்சியில் சிறப்புக் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.சி சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 4 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் கருமத்தம்பட்டி நகராட்சியுடன் கிட்டாம்பாளையம் ஊராட்சியை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது குறித்து பொதுமக்களிடையே கருத்துக் கேட்கப்பட்டது.

அதற்குக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதாவது, கிட்டம்பாளையம் ஊராட்சியில் உள்ள கிராமங்களை கருமத்தம்பட்டி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது. அவ்வாறு இணைக்கப்பட்டால் தங்களுடைய வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கக் கூடாது என ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட கோமதி சுரேஷ் கூறுகையில், "தங்களுடைய கிராமம் கிட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ளதால் வரி குறைந்த அளவில் கட்டப்படுகிறது. இதனை நகராட்சியுடன் இணைத்தால் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் பல மடங்காக உயரும். இங்குள்ளவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களாகவும், விசைத்தறி தொழிலாளர்களாகவும் உள்ளனர். இவர்களால் அதிகமான வரிச் சுமையைத் தாங்க முடியாது.

இதுதவிர, ஊராட்சியில் தங்களுடைய கிராமம் இருப்பதால், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. நகராட்சியானால் அவை முற்றிலும் தடைப்படும். தினக் கூலிக்குச் செல்லக்கூடிய கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்" என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, பேசிய கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.சி சந்திரசேகர், "இந்த சிறப்புக் கிராமசபைக் கூட்டத்தில், கருமத்தம்பட்டி நகராட்சியுடன் கிட்டாம்பாளையம் ஊராட்சியை இணைக்கக் கூடாது என பொதுமக்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகராட்சியுடன் ஊராட்சி இணைக்கப்பட்டால் 4 கிராமங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முற்பட்டால், தொடர் போராட்டங்களை நடத்தி உள்ளதாகவும், விரைவில் கிட்டாம்பாளையம் ஊராட்சியில் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை ஒட்டி பல்வேறு பகுதிகளில் நகராட்சி வேண்டாம்... ஊராட்சியே போதும் என போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருவண்ணாமலையை மாநகராட்சியாக மாற்ற எதிர்ப்பு - கிராம சபை கூட்டத்தில் அதிரடி தீர்மானம்!

ABOUT THE AUTHOR

...view details