சென்னை:கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மூன்றாம் ஆண்டு மாணவனை தாக்கிய விவகாரத்தில் பயிற்சி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் லியோ தெரிவித்தார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிப்பில் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப். இவரது மகன் ஹாலன்(21) விடுதியில் தங்கி 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். மாணவர் ஹாலன் விடுதியில் உணவு அருந்தி விட்டு அறைக்கு நடந்துச் சென்றதாகவும், அப்போது அங்கு மதுபோதையில் அமர்ந்திருந்த அதே மருத்துவக் கல்லூரியில் 5 ஆம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கவின் (24) மற்றும் தியானேஷ்(24) இருவரும் ஹாலனை அழைத்து இளைய மாணவர்களை அழைத்து வருமாறு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் லியோ பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu) இந்த விவகாரத்தில் ஏற்பட்ட வாய்த் தகராறு, மோதலில் முடிந்துள்ளது. இதில் கவின் மற்றும் தியானேஷ் இருவரும் பீர் பாட்டில் கொண்டு ஹாலன் தலையில் அடித்ததால் படுகாயமடைந்த ஹாலன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் தகவல் அறிந்து கீழ்ப்பாக்கம் போலீசார் மாணவர்கள் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தி முயன்றனர். அப்போது, கல்லூரி தரப்பில் விசாரணை செய்து விட்டு பின்னர் கூறுகிறோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தகவல் அறிந்து நெய்வேலியில் இருந்து புறப்பட்டு வந்து புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட 5 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 3 ஆம் ஆண்டு மாணவர்கள் விடுதியில் உணவு அருந்தி விட்டு வரும் வழியில் இருக்கும் பிரச்சனையையும் தெரிவித்தனர்.
கல்லூரி முதல்வர் விளக்கம்:இது குறித்து அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் லியோ ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவர்களுக்குள் நடைபெற்ற சண்டைக் குறித்து 5 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறோம். அந்த விசாரணையின் அடிப்படையில் தவறு செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை இன்று முடிக்கப்பட்டு நாளைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விடுதியில் ராகிங் எதுவும் நடைபெறவில்லை. ராகிங் தடுப்பதற்கான கமிட்டி தினமும் கண்காணித்து வருகிறது" என்று கூறினார்.