சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்குச் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் (Emirates) பயணிகள் விமானம், நேற்று (பிப்.8) புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்துள்ளது. அப்போது பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியேற்ற அதிகாரிகள் பரிசோதித்து, அவர்களை அனுமதித்து வந்தனர்.
அப்போது, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த பஷீர் முகமது (51) என்பவர், துபாய்க்கு சுற்றுலாப் பயணியாக செல்ல வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவருடைய பாஸ்போர்ட் மற்றும் மற்ற ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தபோது, அவர் கேரள மாநிலம் மலப்புரம் காவல் துறையால் தேடப்பட்டு வரும் குற்றம் சாட்டப்பட்ட நபர் என்பது தெரிய வந்துள்ளது.
இது குறிந்து குடியேற்ற அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், பஷீர் முகமது மீது மோசடி வழக்கு ஒன்றில் வழக்குப் பதிவு செய்து, மலப்புரம் காவல் துறையினர் தேடி வந்ததும், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்ததும், கேரள மாநிலம் மலப்புரம் காவல் கண்காணிப்பாளர் பஷீர் முகமதுவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்தது தெரிய வந்துள்ளது.