சென்னை:கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அன்புராஜ் நோட்டு போட்டு லாரி ஓட்டுநர்களிடம் மாமுல் வசூலித்ததாக, தாம்பரம் காவல் ஆணையர் போக்குவரத்து ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் - வண்டலூர் சாலை நல்லம்பாக்கம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து போலீசார் ஆவணங்களை சரி பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அன்புராஜ், அவ்வழியில் வரும் கனரக வாகனங்களை மடக்கி மாமுல் வேட்டையில் அதிகளவு ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
புகாரைத் தொடர்ந்து வழக்கம்போல் கேளம்பாக்கம் - வண்டலூர் பிரதான சாலையில், நல்லம்பாக்கம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த லாரி ஓட்டுநர்களிடம் மாமுல் பெற்றுக் கொண்டு அதை அவரது வாகனத்தில் வைத்திருந்த மாமுல் டைரியில் எழுதி வைத்துள்ளது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.