சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று (செப்.26) நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அவர் தற்போது புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். திமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியான செய்தி. 15 மாதம் காலத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல், கடுமையான சட்ட போராட்டத்தை நடத்தி இன்று உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இந்த 15 மாத காலம் செந்தில்பாலாஜியை சார்ந்தவர்களுக்கு கடுமையான துயரமான காலம்.
அமலாக்கத்துறை அராஜகம்:பாஜகவுடன் சமரசம் செய்து கொள்வதில்லை, அவர்களது அராஜகத்திற்கு அடிபணிவதில்லை என்று உறுதியான நிலைபாட்டை எடுத்து அசைக்க முடியாத மன உறுதியுடன் வெற்றியை பெற்றுள்ளார். தொடர்ச்சியாக அமலாக்கத்துறை இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களை குறி வைத்து அராஜகமான செயலை செய்து வருகிறது.
கரூர் எம்.பி.ஜோதிமணி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:471 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்த செந்தில் பாலாஜி சொன்ன முதல் வார்த்தை என்ன?
செந்தில் பாலாஜி மட்டுமில்லாமல் முதலமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள் பலர் அராஜகற்றிற்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்கள். ஒவ்வொரு விடுதலையின் போது அமலாக்கத் துறைக்கு எதிரான கடுமையான கருத்துகளை உச்ச நீதிமன்றம் முன் வைத்துள்ளது” என்றார்.
உச்ச நீதிமன்றம் பதிலடி:தொடர்ந்து பேசிய அவர், “ஒரு கட்சி வந்து யார் மீதும் வழக்குகளை பதிவு செய்ய முடியாது. சட்ட அமைப்புகள் தான் வழக்குகளை பதிவு செய்ய முடியும். அவ்வாறு, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு சட்டத்திற்கு உட்பட்டு இல்லை. ஒரு மானில அரசு ஆட்சி செய்யும் போது தலைமை செயலகத்தில் அனுமதியின்றி அத்துமீறி அமலாக்கத்துறை நுழைந்ததை வன்மையாக கண்டிக்கிறோம். அதற்கு தற்போது உச்ச நீதிமன்றம் பதிலடி தந்துள்ளது.
அமலாக்கத்துறை பாஜக அடியாளாக செயல்பட கூடாது:அமலாக்க துறை ஒருவரின் சட்டரீதியான உரிமையை தடுத்துள்ளது. கொடுமையான அமைப்பாக அமலாக்க துறை செயல்பட்டு கொண்டு இருக்கிறது. மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அமலாக்க துறை அதிகாரிகள் அரசு அமைப்பாக இல்லாமல் பாஜக வின் அடியாள் வேலை செய்யும் அமைப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகள் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பாஜக அடியாளாக செயல்பட கூடாது.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர்:செந்தில் பாலாஜி சிறந்த அமைச்சராக செயல்பட்டு இருக்கிறார். அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட கூடியவர். செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக வருவது தமிழ்நாட்டிற்கும், கொங்கு மண்டலத்திற்கும் நல்லது. மேலும், தமிழ்நாட்டில் 5 முனை அல்லது 10 முனை போட்டியாக இருந்தாலும் இந்திய கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்