ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்த சிக்கஹள்ளியில் உள்ள தாளவாடி அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இது தமிழக அரசுப் பள்ளியாக இருந்தாலும், இங்கு கன்னட மொழிப்பாடம் முதன்மையாக கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில், இப்பள்ளியில் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா இன்று நடைபெற்றது. இதில் இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு வயர்லெஸ் ஒலிபெருக்கியை நினைவுப் பரிசாக வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசின் உயர் பதவியில் இருக்கும் முன்னாள் கன்னட மாணவ, மாணவியர்கள் பேசுகையில், "சிபிஎஸ்சியை விட தமிழக அரசுப் பள்ளிகள் சிறந்ததாக உள்ளது. கன்னட மொழியில் படித்த நாங்கள் கர்நாடக அரசு நடத்திய போட்டித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியராகவும், உயர் பதவியிலும், ஐடி நிறுவனத்திலும் பணியாற்றி வருகின்றோம்.
இந்தப் பள்ளிக்கு அதிக டிமாண்டு உள்ளது. ஏனெனில், இங்கு தரமான கல்வி வழங்கப்படுவதால் தான், தற்போது நாங்கள் கர்நாடக அரசுப் பணியில் சேர்வது சாத்தியமானது. அதனால் பள்ளிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி" என பெருமையுடன் தெரிவித்தனர்.
இதற்கிடையே, இப்பள்ளி வெள்ளிவிழா நிகழ்ச்சிக்கு சாம்ராஜ்நகர் மரியால மஹாசம்ஸ்தான மடம் இம்மடி முருகராஜேந்திர மஹா சுவாமி கலந்து கொண்டு, பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து, 25 ஆண்டுகளில் இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவப்படுத்தினர்.