சென்னை: காவிரி ஆற்றின் நீரானது தமிழகத்தின் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரியில் இருந்து கபினி, கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் அணைகளுக்கு திறந்து விடப்படும் நீர், டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்கு இன்றியமையாத உற்பத்தி காரணியாக உள்ளது. இந்த நிலையில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 9 ஆயிரம் கோடியில் அணை கட்ட முயற்சி செய்து வருகிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா குறியாக உள்ளது. அதேபோல, தமிழகத்தில் எந்த ஆட்சி அமைந்தாலும், மேகதாதுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட அதிகம் பயன் பெறப்போவது தமிழ்நாடு தான் என்று அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில், சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்போடு செயல்பட்டு வரும் பயோ சி.என்.ஜி. இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை ஆய்வு செய்வதற்காக, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று வந்தார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தைப் போல், கர்நாடகாவில் செயல்படுத்துவது தொடர்பாக டி.கே.சிவக்குமார் சென்னையில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவகுமார், கர்நாடகாவில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பாக தமிழகத்தில் 15 அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்வதற்காக வந்திருப்பதாகவும், பெருமளவிலான திடக்கழிவுகளை எவ்வாறு கையாளுவது, அதிலிருந்து எவ்வாறு இயற்கை எரிவாயு உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தமிழக அரசு அதிகாரிகள் விவரித்ததாக தெரிவித்தார்.