தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நா.த.க-வில் இருந்து காளியம்மாள் விலகல்! "தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்" என உருக்கமான கடிதம் - KALIAMMAL RESIGN

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பிரகாசன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பிரகாசன்
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பிரகாசன் (NTK)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2025, 3:20 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சியின் முகமாகவும், தன் பரப்புரை பேச்சுக்களால் மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்ட மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பிரகாசன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பல மாதங்களாகப் புகைந்த செய்திக்கு தற்போது தன் அறிக்கை வாயிலாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நாதக-வில் இருந்து காளியம்மாள் விலகி பிரபலக் கட்சியில் சேர வாய்ப்பிருப்பதாகவும், சில கட்சிகளுடன் தொகுதி உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் பேசி வந்தனர். இந்நிலையில், தன் விலகல் கடிதத்தை காளியம்மாள் கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “யார் வேண்டுமானாலும் கட்சியில் இருந்து விலகலாம். அதற்கான முழு சுதந்திரம் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது,” என்று தெரிவித்திருந்தார்.

காளியம்மாள் விலகல் கடிதம்

இந்த சூழலில் காளியம்மாள் வெளியிட்டுள்ள விலகல் கடிதத்தில், “தாய்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுகிறேன். கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும் உண்மையும், நேர்மையுமாய் உளப்பூர்வமாக என் குடும்பத்திற்கும் மேலாக நேசித்து வந்தேன். இந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல்ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது.

பல உறவுகள் அக்கா. தங்கையாகவும் அண்ணன், தம்பிகளாகவும் கிடைத்ததையும் அவர்கள் என்னுடன் பழகிய விதங்களையும் எண்ணி மகிழ்கிறேன். நமக்கெல்லாம் ஒரே பெருங்கனவு தான், அது தமிழ்த்தேசியத்தின் வெற்றியும், அதனை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்னும் உன்னத நோக்கமும் அந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்ற பாதையில் நானும் ஒரு பகுதியாய் இணைந்து பயணித்ததில் நான் பெருமை கொள்கிறேன்.

ஆனால் இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழி நடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு பயணித்ததில் பலரின் அன்பு, அக்கறை, நம்பிக்கை என் மீதான அளவற்ற பாசம் என்ற அனைத்தையும் மனதில் நிலைநிறுத்தியுள்ளேன்.

தமிழ்தேசியத்தை விதைக்கும் பணி

என்னுடன் இத்தனை நாட்களாக உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த. களத்தில் இன உணர்வோடு நின்று நேர்மையாய் வேலை செய்த அத்தனை உறவுகளுக்கும், உண்மையான உழைப்பாளர்களுக்கும், உலகத்தமிழர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகளுக்கும் நன்றிகளை சொல்வதோடு என் வருத்தங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து, பிறந்த இனத்துக்காக தமிழ்த்தேசிய களத்தில் ஓடிய என்மீது மிகுந்த நம்பிக்கையும் அன்பும் வைத்து களமாடிய உங்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள். எனக்கான நெருக்கடிகள் நிறைய வந்த போதும் என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையாலும், நான் உங்கள் மீது கொண்ட அன்பினாலும், எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தேன். ஆனால் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறேன்.

இதையும் படிங்க:நா.த.க. காளியம்மாள் திமுக-வில் இணைய உள்ளாரா? - அமைச்சர் சேகர்பாபு பதில்!

அவதூறு வெறும் வார்த்தைகள் தானே என்று நினைத்து அள்ளி தெளிப்பவர்களுக்கு மத்தியில், என் மீது அளப்பரிய அன்பு கொண்டு நேசிக்கிற உங்கள் அத்தனை பேருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டவளாக இருப்பேன். என்னுடைய இந்த முடிவு பலருக்கு வருத்தத்தைத் தரலாம். எனக்கும் தான். காலத்தின் வழிநடத்தல்! என்றும் தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்.. நன்றி,வணக்கம், நாம் தமிழர்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, தி.மு.க-வில் இணைய உள்ளார் என பேசப்பட்டது. அதனடிப்படையில், நேற்று (பிப்ரவரி 23) அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர் கேள்வியெழுப்பிய நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அந்த முடிவை எடுப்பார்,” என்று பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details