ஈரோடு:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் கள்ளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் தமிழக அரசு கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள் நல்லசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தமிழக அரசு, கேரளா, புதுச்சேரி, தெலங்கானா, கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களில் கள்ளுக்கு அனுமதி இருப்பது போன்று தமிழகத்தில் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நல்லசாமி, "தமிழகத்தில் கள் பற்றி அரசுக்கும், அரசியல் கட்சிக்கும் சரியான புரிதல் இல்லை. கலப்படத்தை காரணம் காட்டி தமிழக அரசு கள்ளுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் கேரளா, தெலங்கானா, ஆந்திராவில் கள்ளுக்கு தடையில்லை.
கலப்படத்தைக் காரணம் சொல்லும் தமிழக அரசு கலப்படத்தை ஏன் தடுக்க முடியாது. தடுக்க முடியவில்லை என்றால் தமிழக அரசு ஆளுமை இல்லாத அரசா? ஆளுமை இல்லாத அரசாக இருந்தால் ஏன் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும்?.
கடந்த 19ஆண்டுகளாக கள்ளுக்கு அனுமதி கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். கள் போதைப் பொருள் என நிரூபித்தால் கோடி ரூபாய் பரிசு என அறிவித்தும், இதுவரை யாரும் நிரூபிக்க முன் வரவில்லை. ஆகையால் கள் தடை நீக்க வேண்டும். உணவுப் பொருட்களாக அறிவிக்க வேண்டும்.
கள் விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டத்தினை பின்பற்றி தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். மேலும், காவிரியில் கடந்த 28 ஆண்டுகளாக சரியான இலக்கை நோக்கி தமிழக அரசு இந்த வழக்கை நடத்தவில்லை. தினந்தோறும் நீர் பங்கீடு என்பதை முன் நிறுத்தி வழக்கை நடத்தி தீர்ப்பு பெற்று இருந்தால், புதுச்சேரி மாநிலத்திற்கு உரிய நீர் கிடைத்திருக்கும்.
தமிழ்நாடு - கர்நாடகா மாநிலத்தின் மழைநீர் வடிகாலாக மட்டுமே உள்ளது. காவிரி நீர் பங்கீடு தீர்ப்பு கானல் நீராக உள்ளது. மத்தியில் காங்கிரஸ், பாஜக என எந்த கட்சி ஆட்சி நடந்தாலும் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநிலங்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்பதுதான் மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியின் தொடர் நிலைப்பாடாக உள்ளது. இதனை உணர்ந்து தமிழக அரசு தினந்தோறும் நதிநீர் பங்கீடு என்ற சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்" என நல்லசாமி வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:”கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக கூறும் சிபிஐ விசாரணையே சரி”- எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் - TRICHY SDPI MEET