தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆணுக்கு ஒருபடி அதிகமாகவே பெண்களால் முன்னேற முடியும் - அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி ஊக்கம்! - சர்வதேச மகளிர் தினம்

Women's day: ஒரு பெண் தன் குடும்ப உறுப்பினர்களையும், சமூகத்தைச் சார்ந்தவர்களையும் முன்னேற்றுவதை குறிக்கோளாக வைத்துக் கொண்டால் வெற்றிகரமான பெண்ணாக உருவாக முடியும் என வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அரசுச் செயலாளர் ஜோதி நிர்மலாசாமி கூறியுள்ளார்.

International Womens Day
மகளிர் தின விழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 4:34 PM IST

Updated : Mar 11, 2024, 9:40 AM IST

மகளிர் தினவிழா

சென்னை: சென்னை எத்திராஜ் கல்லூரியில் நாளை மகளிர் தினம் கொண்டாட இருப்பதை முன்னிட்டு, எதிர்கால நிரந்தர முன்னேற்றத்திற்கு பெண்கள் வினை ஊக்கிகளாக இருக்கின்றனர் என்ற தலைப்பில் இன்றும், நாளையும் சர்வதேச கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் நடிகையும், நடன இயக்குநருமான பத்மவிபூஷன் விருது பெற்ற பத்மா சுப்பிரமணியத்திற்கு விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அரசுச் செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, “இந்த சர்வதேச கருத்தரங்கில் வாழ்வில் பல சாதனைகளைப் படைத்த பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகையும், நடன இயக்குநருமான பத்ம விபூஷன் விருது பெற்ற பத்மா சுப்பிரமணியம், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷையன் உள்ளிட்டவர்கள் வந்துள்ளனர். ஒரே கூரையின் கீழ் நிறைய மாணவிகளை பார்த்தது சந்தோஷமாக இருக்கிறது.

பெண் குழந்தைகள் நிறைய படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் ரொம்ப பெரிய லட்சியங்களை அடைய முடியும் எனக் கூறியதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டனர். பெண்கள் வினை ஊக்கிகளாக இருக்க வேண்டும். இந்த சமூகத்தின் தொடர் வளர்ச்சியை பார்த்து வருகிறாள்.

பெண்கள் உயரங்களைத் தொடும்போது தடைகள் வரத்தான் செய்யும். ஒரு பெண் படித்து முன்னேறும்போது சமூகத்தில், குடும்பத்தில் உள்ள தடைகளை உடைத்து முன்னேற வேண்டும். ஒவ்வொரு பெண் குழந்தையும் நாளை சமூகத்தை மாற்றும் வினை ஊக்கியாக இருப்பார்கள் என்பதைச் சொல்லும்போது அவர்களிடம் வரவேற்பு உன்னதமாக இருந்தது.

உடலளவில் பலவீனமாக இருப்பதாக நினைக்கக் கூடாது. நேர்மையின் சக்தியால், உடம்பின் திறமையால் நம்மை வலிமையானவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். வலிமையான பெண் என்பது, உடலால் வலிமை என்பது தேவையில்லை.

மனதால் வலிமையாக இருந்தால் போதும். மன வலிமை, மன உறுதி ஒரு பெண்ணிற்கு வந்தால், ஆணிற்கு நிகராக அல்லாமல், ஆணிற்கு ஒரு படி அதிகமாகவே அவளால் வலிமையுள்ளவளாக மாற முடியும் என்பதை மகளிர் தின செய்தியாக கூறிக்கொள்ள இருக்கிறோம்.

அப்படி முன்னேற்றம் வரும்போது ஆண்கள் மட்டும் அல்லாமல், பெண்கள் சார்ந்த சமுதாயமே பிடித்து இழுக்கப் பார்க்கிறது. அது உண்மைதான். அவள் நல்ல படிநிலைகளை அடையும்போது, பற்பல செய்திகளைச் சொல்லி அவளைப் பின்னோக்கி இழுக்கும் சக்திகள் இருக்கத்தான் செய்கிறது. அப்படி சொல்லும்போது அவளின் மனவலிமையை குறைக்கும் சக்திகளும், முயற்சியும் அங்கே எடுக்கப்படுகிறது.

ஆனால் இதை எல்லாமல் கண்டு கொள்ளாமல், அவள் தன் இலக்கு ஒன்றையே நினைத்து தன்னையும், தன் குடும்ப உறுப்பினர்களையும், சமூகத்தைச் சார்ந்தவர்களையும் முன்னேற்றுவதை குறிக்கோளாக வைத்துக் கொண்டால், நிச்சயம் ஒவ்வொரு பெண்ணும் வெற்றிகரமான பெண்ணாக உருவாக முடியும் என்பதை இங்கே மகளிர் தின செய்தியாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

நடிகையும், நடன இயக்குநருமான பத்மவிபூஷன் விருதுபெற்ற பத்மா சுப்பிரமணியம் பேசும்போது, "அகில உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு, மகளிருக்கு பிரத்யேகமாக என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண் சக்தி மிகவும் பெரிய சக்தி, ஆகவே 'ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே' என்பார்கள்.

ஆனால் ஆவதுதான் பெண்ணால் என்பதை உலகம் இன்று நிலை நாட்டி வருகிறது. பெண்கள் எப்போதும் சமாதானத்திற்கு கூடவே இருந்து கொடிகட்டி முன்னாள் நிற்பவர்கள். ஆகவே, பெண்கள் மூலமாக உலக சமாதானம். அதாவது வீட்டில் சமாதானம், நாட்டில் சமாதானம், உலகில் சமாதானம். எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:49 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்.. தொடர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

Last Updated : Mar 11, 2024, 9:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details