திருச்சி:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆலோசிக்க அக்கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "வரும் நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாத நிலையில், தேர்தலின் போது கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கச் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தையும், மக்களாட்சியையும், மாநிலங்களின் உரிமைகளையும், மதச்சார்பின்மை ஆகியவற்றை அடியோடு அழிக்கும் எண்ணத்தில் தான் பாஜக ஆட்சி செய்து வந்துள்ளது. அதனை மீண்டும் தொடர்வதற்காகவும், திட்டங்களை நிறைவேற்றிட பாஜக தேர்தலை ஒரு கருவியாக்கி சூழ்ச்சிகளுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த பயங்கர அபாயங்களிலிருந்து நாட்டை மீட்பதற்கு மதச்சார்பற்ற சக்திகள் ஓர் அணியில் திரண்டு உருவாக்கிய இந்தியா கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியும் அங்கம் வகிக்கிறது. நாட்டை பாசிச அபாயத்திலிருந்து மீட்க, தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த பத்தாண்டுகளாக மனிதநேய மக்கள் கட்சி திமுகவுடனான கூட்டணியில் உறுதியாக இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணியில் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது.