சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பொன்னை பாலு சுரேஷின் சகோதரர் என்பது தெரிய வந்திருக்கும் நிலையில், ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல திட்டமிடப்பட்டு, கொலை செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், அவரின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளியில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு வழக்கறிஞர்கள், ஆதரவாளர்கள், திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து ஜவாஹிருல்லா கூறியதாவது, “ஒடுக்கப்பட்ட மக்களின் மரணம் வேதனை தருகிறது. ஆம்ஸ்ட்ராங் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வீரமரணம் அடைந்துள்ளார். என்னுடைய நீண்ட கால நண்பர் அவர். தான் மட்டும் உயர்ந்தால் போதாது, தன் சமூகமும் உயர வேண்டும் என்று எண்ணியவர். ஏராளமான தலித் மக்களை வழக்கறிஞர் உட்பட பல படிப்புகளை படிக்க வைத்தார்.
இந்த படுகொலை இந்தியாவை உற்று நோக்க வைக்கிறது. படுகொலை இயக்கியவர்கள் யார்? குறுகிய காலத்தில் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த கொலையில் தொடர்புடையவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். மறைந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்டித்தர வேண்டும். சிபிசிஐடியே இந்த வழக்கை நல்லபடியாக கையாளும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” இவ்வாறு அவர் கூறினார். தற்போது, அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படையுங்கள் - தமிழக அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்