சேலம்:தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (ஏப்.9) சேலம் குரங்கு சாவடி அருகே பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ்பாபு இல்லத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் இன்று மாலை 5.30 மணி அளவில் அவரது இல்லத்திற்கு வந்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையானது சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்த சோதனையில் பணம் ஏதும் கிடைக்கவில்லை. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், "நாடாளுமன்றத் தேர்தலுக்கு பட்டுவாடா செய்ய பணம் வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டோம். ஆனால், சோதனையில் பணமும் மற்ற பொருட்களையும் பதுக்கி வைக்கவில்லை எனத் தெரிய வந்தது. ஆனாலும், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறினர்.
இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வந்திருந்த சூரமங்கலம் உதவி ஆணையாளர் நிலவழகன் மற்றும் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீண்டும் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என சுரேஷ்பாபுவிடம் கூறிக்கொண்டு உள்ளே நுழைய முற்பட்டதாகக் கூறப்படுகிறது.