சென்னை: சென்னை நீலாங்கரையைச் சேர்ந்தவர் வினோத்குமார் ஜோசப். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் இருந்து மலேசியா வழியாக துபாய் நாட்டிற்கு சுற்றுலாப் பயணியாக புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில், மலேசியாவில் குடியுரிமை அதிகாரிகளுக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், இவரை பிடித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில், வினோத்குமார் ஜோசப், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக்காக இந்தியாவில் இருந்து புறப்பட்டு வந்திருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மலேசியாவிலிருந்த அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள், வினோத்குமார் ஜோசப்பை கடந்த 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மலேசிய நாட்டில் இருந்து சென்னைக்கு திருப்பி அனுப்பினர்.
அதோடு, அவர் குறித்து சென்னையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மலேசியாவில் இருந்து சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்ட வினோத்குமாரை, சென்னை விமான நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவருடைய செல்போன், லேப்டாப், ஐபாட் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.
அப்போது, வினோத்குமார் துபாயில் உள்ள செல்வம் என்பவரிடம் தொடர்ந்து பேசி வந்தது தெரிய வந்துள்ளது. மேலும், வைர வியாபாரத்தில் தொடர்புடைய மோனிகா என்ற பெண்ணையும் தொடர்பு கொண்டு பேசி இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் அப்பு என்ற ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அப்பு என்பவர், சில அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர் என்றும், தேர்தல் செலவினங்களுக்காக துபாய், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணப் பரிவர்த்தனை மூலம் ரூ.200 கோடி, இந்தியாவுக்கு கொண்டு வரும் திட்டத்துடன் வினோத்குமார் ஜோசப் செயல்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு அப்பு நெருக்கமானவர் என்பது தெரிய வந்துள்ள நிலையில், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்காக ஹவாலா பணப்பரிமாற்றம் நடக்க இருந்ததா என்பது பற்றி தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (ஏப்.9) மாலை, வினோத்குமார் ஜோசப்பை மேல் விசாரணைக்காக, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததை அடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையின் முடிவில் தான் முழுத் தகவல்கள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
ஆனால், தற்போது வினோத்குமார் ஜோசப் மூலமாக, வெளிநாட்டில் இருந்து ரூ.200 கோடி ஹவாலா பணப் பரிமாற்றம் வழியாக இந்தியாவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இதேபோல் வேறு வழியில் ஏதேனும் ஹவாலா பணம் பரிமாற்றம் இந்த தேர்தல் நேரத்தில் இந்தியாவுக்கு கடத்தி வரப்படுகிறது என்பது பற்றியும் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:விழுப்புரம் பிரச்சாரத்தில் பானை சின்னம் பாடலுக்கு நடனமாடிய அமைச்சர் பொன்முடி! - Lok Sabha Election 2024