மதுரை:மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் மனுக்கள் குறித்து விசாரணை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் சில மனுக்களை விசாரணை செய்த போது போன மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த நீதிபதி, இவர்களுக்கு கடந்த மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் மீண்டும் இரண்டாவது குற்றவாளியாக கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இதுகுறித்து விசாரணை செய்தார். அப்போது சில அதிர்ச்சியான தகவல் வெளியானது.
அதாவது குற்ற வழக்குகளில் முதல்முறையாக கைது செய்யப்படுபவர்கள் சிறைச்சாலையில் அடைக்கப்படும்போது, ஏற்கெனவே தொடர் கஞ்சா வழக்குகளில் கைது செய்பவர்களோடு தொடர்பு ஏற்பட்டு இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே இது குறித்து விளக்கம் கேட்பதற்காக மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் சிறைத்துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமாரை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இதனையடுத்து இன்றைய விசாரணையின்போது, சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அப்பொழுது சிறைத்துறை டிஐஜி பழனி குமார் "நீதிமன்றத்தில் முதல் குற்றவாளிகளை வயது வாரியாக பிரித்து மதுரை சிறையில் வைத்து வருகிறோம்" என தெரிவித்தார்.