சென்னை: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய யாழ்ப்பாணம் நகருக்கு கூடுதம் விமானம் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலத்திற்கு பிறகு நிறைவேறியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் பகல் நேரங்களில் மட்டும் செயல்படக்கூடிய விமான நிலையத்தை இலங்கை அரசு ஏற்படுத்தியது. அதோடு சென்னை- யாழ்ப்பாணம் - சென்னை இடையே, ஏர் இந்தியா நிறுவனத்தின் சகோதர நிறுவனமான அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம், விமானச் சேவையை தொடங்கி நடத்தியது.
கரோனா பெருந்தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக அந்த விமான சேவையும் நிறுத்தப்பட்டது. கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த பின்னர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் தேதியில் இருந்து மீண்டும் சென்னை - யாழ்ப்பாணம் - சென்னை இடையே அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் விமான சேவையை தொடங்கியது.
இந்த விமானம் காலை 10.55 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் சென்றுவிட்டு மீண்டும் பகல் 2.40 மணிக்கு சென்னைக்கு திரும்பி வருகிறது. இந்த விமான சேவைகள் காலை நேரம் மட்டுமே இயக்கப்படுவதால் பிற்பகலிலும், சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்தனர். அதிலும் குறிப்பாக சுற்றுலா பயணிகள், யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழர்கள், அதிகமாக வலியுறுத்தினர்.
இந்த நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து சென்னை - யாழ்ப்பாணம் - சென்னை இடையே தினசரி விமான சேவையை தொடங்கி நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து செப்டம்பர் 1 தேதியில் இருந்து தினமும் பகல் 1.55 மணிக்கு, புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் யாழ்ப்பாணத்திற்கு, மாலை 3.10 மணிக்கு செல்கிறது. மறுமார்க்கத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்கிறது.
விமான கட்டணம் எவ்வளவு?:சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு பயண கட்டணமாக ரூ.7,604 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் செப்.1 முதல் சென்னை- யாழ்ப்பாணம் - சென்னை இடையே தினமும் 2 விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த விமான சேவைகளை காலையில் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனமும், மாலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் இயக்குகின்றன.
இதனால் சென்னையில் இருந்து மாலையில் யாழ்ப்பாணம் செல்வதற்கு விமான சேவை இல்லை என்ற குறைபாடு நீங்குகிறது. இந்த இரு விமான சேவைகள் பயனாக அவசர வேலையாக யாழ்ப்பாணம் சென்று விட்டு உடனடியாக சென்னை திரும்புபவர்கள் காலை அலையன்ஸ் ஏர் விமானத்தில் சென்று விட்டு மாலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னைக்கு திரும்பி வர முடியும். அதோடு யாழ்ப்பாணம் சுற்றுலா தளமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த விமான சேவைகள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:வக்ஃப் சட்டத்தில் மோடி அரசு கொண்டு வரவுள்ள 40 திருத்தங்கள்? இந்தியா கூட்டணியை அலர்ட் செய்யும் மனிதநேய மக்கள் கட்சி!