சென்னை:பல்லாவரம், திமுக எம்எல்ஏ-வின் மகன் வீட்டில் பணிபுரிந்த இளம்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரது மகன் மற்றும் மருமகள் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் இவ்விருவரையும் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
திருவான்மியூர் பகுதியில், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ-வின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லின் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் வீட்டில் பணி புரிந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது சிறுமியை அடித்துக் கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்யப்பட்டதாக அவர்கள் வீட்டில் பணிபுரிந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மருத்துவமனை மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நீலாங்கரை மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் ஆகியோர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டுதல், அடித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.