சென்னை: மத்திய அரசின் என்ஐஆர்எஃப் (NIRF) பட்டியலில் சென்னை ஐஐடி மீண்டும் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. இதுகுறித்து நிரவாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டிலேயே தனது முதன்மையான நிலையை மீண்டும் நிலைநிறுத்தியுள்ள சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்திய அரசின் கல்வி அமைச்சகம் அறிவிக்கும் தேசிய கல்வி நிறுவன தரவரிசைக் கட்டமைப்பின் (NIRF) தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 9வது ஆண்டுக்கான என்ஐஆர்எஃப் இந்தியா தரவரிசை முடிவுகளை டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவித்து பரிசுகளையும் வழங்கினார். இந்தியக் கல்வி வரலாற்றில் இதுவரை கண்டிராத சாதனையாக, ஐஐடி மெட்ராஸ் ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.
2016-ல் தரவரிசை வெளியிடத் தொடங்கியது முதல் கடந்த 9 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக பொறியியல் பிரிவிலும் முதலிடத்திலேயே நீடித்து வருகிறது. ஆராய்ச்சி நிறுவனங்கள் பிரிவில் கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த ஐஐடி மெட்ராஸ் தற்போது முதலிடத்திற்கு தரவரிசையில் முன்னேறியுள்ளது.
கண்டுபிடிப்புகள் பிரிவில் (கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான கல்வி நிறுவனங்களின் அடல் தரவரிசை என்ற பெயரில் இருந்தது) முந்தைய ஆண்டில் இரண்டாம் இடத்திலிருந்து தற்போது முதல் இடத்தை எட்டிப் பிடித்துள்ளது. இதற்கான விருதுகளை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி நேரில் பெற்றுக் கொண்டார்" எனக் கூறப்பட்டிருந்தது.
மேலும் அந்த அறிக்கையில், "கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐஐடி மெட்ராஸ் உயர்சிறப்பு கல்வி நிறுவனமாக (Institution of Eminence - IoE) இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. ஐஐடி மெட்ராஸ் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான மைன்ட்குரோவ், இந்தியாவிலேயே முதல்முறையாக வணிகரீதியான உயர்செயல்திறன் கொண்ட 'செக்யூர் ஐஓடி' எனப்படும் RISC-V அடிப்படையிலான 'சிஸ்டம் ஆன் சிப்'பை (SoC) வெற்றிகரமாக வடிவமைத்து, தயாரித்து பயன்பாட்டிற்குத் தயார்படுத்தியுள்ளது.