தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 2:59 PM IST

Updated : Jul 12, 2024, 10:51 PM IST

ETV Bharat / state

மதுரை கிருதுமால் நதியைக் காக்க வேண்டிய தேவை என்ன? - நீரியல் ஆய்வாளர் கூறும் முக்கிய சான்றுகள்! - Madurai Kirudhumal River

Kirudhumal River: மதுரையின் முக்கிய அடையாளமாகத் திகழும் வைகை நதிக்கு இணையாகப் போற்றப்படும் கிருதுமால் நதி இன்றைய நதிநீர் இணைப்பின் பண்டைய தொழில்நுட்பச் சான்று என்று நீரியல் ஆய்வாளர் ஜோ.கனகவல்லி கிருதுமால் நதி குறித்து விளக்கமாகக் கூறியுள்ளார்.

நீரியல் ஆய்வாளர் ஜோ.கனகவல்லி மற்றும் கிருதுமால் நதி
நீரியல் ஆய்வாளர் ஜோ.கனகவல்லி மற்றும் கிருதுமால் நதி (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: நதிகள் இணைப்பு குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நமது முன்னோர்கள் அன்றைக்கு அதற்கு அச்சாரம் இட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியும் இருக்கிறார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் மதுரையின் கூவம் என்று அழைக்கப்படும் இழிநிலைக்கு மாற்றப்பட்டுள்ள கிருதுமால் நதி.

மதுரையில் உள்ள நிலையூர் கால்வாய், பெருங்குடி கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களை மேம்படுத்த தமிழக அரசால் ரூ.20.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.7.35 கோடி கிருதுமால் ஆற்றின் மேம்பாட்டுக்காக செலவிடப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கிருதுமால் நதி குறித்து நீரியல் ஆய்வாளர் ஜோ.கனகவல்லி ஆய்வு மேற்கொண்டார். கண்மாய், குளம், ஊரணிகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட இவர் கண்மாய்த் தொழில்நுட்பம் (Technology of Tanks) என்ற ஆங்கில நூலை நீரியல் வல்லுநர் சி.ஆர்.சண்முகத்தோடு இணைந்து உருவாக்கியுள்ளார்.

இந்த நூல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் டெல்லியை தலைமை இடமாகக் கொண்ட பிரதான் என்ற வளர்ச்சி நிறுவனத்தின் நீர்நிலை மேம்பாட்டுத் திட்டத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். கிருதுமால் நதி குறித்து ஜோ.கனகவல்லி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார். அதில் அவர் கூறியுள்ளதாவது, "கிருதுமால் நதி மதுரை மாவட்டம் நாகமலை அடிவாரத்தில் உள்ள துவரிமான் கண்மாயில் இருந்து துவங்கி நான்கு மாவட்டங்கள் வழியே ஏறக்குறைய 74 கி.மீ தூரம் ஓடி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மலட்டாற்றில் கலக்கிறது. இதுமட்டுமல்லாது, சுமார் 784 கண்மாய்களுக்கான நீராதாரமாக கிருதுமால் நதி திகழ்கிறது. இந்த நதி குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக லண்டன் பல்கலைக்கழகத்தோடு இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுக் குழுவில் ஒரு ஆய்வாளராக நானும் பங்கெடுத்தேன்.

கிருதுமால் நதியின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மழைநீர் வடிகால்: கிருதுமால் நதியைப் பொறுத்தவரை, துவரிமான் கண்மாய் மற்றும் மாடக்குளம் கண்மாய் ஆகியவற்றின் உபரிநீரால் உருவாகிறது. துவரிமான் கண்மாயின் வடிகால் வாய்க்காலாக கிருதுமால் நதி திகழ்கிறது. அதுமட்டுமன்றி, நாகமலையில் உருவாகக்கூடிய ஐந்து ஊற்றுகளும் இந்த நதியின் மூலாதாரங்களில் ஒன்றாகும். மேலும், இந்த நதி செல்லும் வழியில் பொழியக்கூடிய மழை நீர் அனைத்தையும் சுமந்து கொண்டு செல்லும் வகையில் பெரிய நதியாக உருவெடுத்து பயணம் மேற்கொள்கிறது.

நதிநீர் இணைப்பின் சான்று:ஒரு நதிப்படுகையில் உருவாகும் உபரி நீரை மற்றொரு நதிப்படுகைக்கு மாற்றக்கூடிய வகையில் (Inter basin Transfer) இந்த நதியின் இயல்பான தொழில்நுட்பம் அமைந்துள்ளது, குண்டாற்றின் உபநதியாக திகழும் கிருதுமால் நதி. வைகையில் இருந்து தண்ணீர் பெறும் மாடக்குளம் மற்றும் துவரிமான் கண்மாய்களின் உபரி நீர் கிருதுமாலாக உருமாற்றம் பெறுகிறது.

அந்த நதி செல்லும் வழியில் விரகனூர் மற்றும் பார்த்திபனூர் மதகு அணைகளில் இருந்து வரும் கால்வாய்கள் மூலமாகவும் கிருதுமால் தனக்கான நீரைப் பெறுகிறது. இருக்கின்ற நீரை பாசனத்திற்கு முறையான வகையில் பயன்படுத்துவதற்கு எடுத்துக்காட்டான ஒரு நதியாக கிருதுமால் இன்றளவும் திகழ்கிறது.

கோட்டை அகழி:மன்னர் காலத்தில் மதுரை கோட்டைச் சுவரைச் சுற்றி அமைந்திருந்த அகழிக்கு கிருதுமால் நதியில் இருந்துதான் தண்ணீர் பெறப்பட்டுள்ளது. மதுரையைச் சுற்றி மாலை வடிவத்தில் இந்த நதி பயணம் செய்த காரணத்தால் தான் திருமாலின் கழுத்திலுள்ள மாலை என்ற பொருள்படும் வகையில் கிருதுமாலை என்ற பெயரைப் பெற்றதாக கூறப்படுகிறது. கிருதுமால் நதியும், வைகை ஆறும் இணைந்து தான் மதுரையை மிகச் செழிப்பாக வைத்திருந்தன. இந்த கிருதமால் நதி ஓடிக்கொண்டிருந்த காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் மதுரையில் மிக செழிப்புடன் இருந்தது.

புராணங்களில் கிருதுமால் நதி:நமது பண்டைய புராணங்களான ஸ்ரீமத் பாகவதம், நாராயணீயம் ஆகியவற்றில் கிருதுமால் நதியின் பெருமை குறித்து சிறப்பாக பேசப்பட்டுள்ளது. மதுரையில் வாழ்ந்த, வாழ்கின்ற அனைவரின் வாழ்வோடும் இந்த கிருதுமால் நதி கலாச்சார பண்பாட்டு ரீதியாக மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டு விளங்குகின்றது.

சீரமைப்பு:காலப்போக்கில் பல்வேறு சிக்கல்கள் காரணமாக கிருதுமால் நதி தனது இயல்பை இழந்து கடும் சுற்றுச்சூழல் கேட்டிற்கு ஆளானது. தற்போது தமிழக அரசு கிருதுமால் நதியை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மீண்டும் பழைய நதியை மீட்டெடுப்பதற்கு செய்ய வேண்டிய முக்கிய பணிகளாக நான் கருதுவது, இந்த நதி செல்லும் வழியில் வந்து சேரக்கூடிய மழை நீர் வாய்க்கால்களை முறையாக தூர்வாரி அவற்றை செம்மை செய்ய வேண்டும்.

அதே போன்று, கிருதுமால் நதியில் கழிவுகள் சேராமல் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆங்காங்கே மதுரை நகருக்குள் கிருதுமால் நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள பாலங்களால் இதன் நீரோட்டம் தடைபட்டு அப்பகுதியில் கழிவுநீர் சேர்ந்து அசுத்தமாக மாறியுள்ளது. அதனை உடனடியாக சரி செய்து தொடர்ந்து நீரோட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.

மதுரையை தாண்டியவுடன் இந்த நதி செல்லும் வழியில் ஏற்கனவே உள்ள தடுப்பணைகளை புனரமைப்பு செய்தாலே போதுமானது. இதன் மூலம் கண்மாய்கள் அனைத்தும் பாசன வசதி பெறும். விவசாயிகள் தங்களுக்குரிய தண்ணீரைப் பெறுவதற்கு வாய்ப்பும் உருவாகும்.

அதேபோன்று, பல்வேறு பகுதிகளில் இந்த நதிக்கு வந்து சேரும் கால்வாய்கள் முட்புதர்கள் மண்டி மண் மேடாக உள்ளன. அவற்றையும் சீரமைக்க வேண்டும். வைகை குண்டாறு இடையிலான இந்த கிருதுமால் நதியின் செழிப்பை உறுதி செய்ய வேண்டியது பொதுமக்கள் மற்றும் வளர்ச்சி நிறுவனங்களின் கடமையாகும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கழுகுகளின் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்ந்துள்ளது.. எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Last Updated : Jul 12, 2024, 10:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details