தூத்துக்குடி: எட்டையாபுரம் அருகே உள்ள முத்தலாபுரம் கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். பட்டதாரியான இவருக்கும், தூத்துக்குடியைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரியான சந்தன மாரியம்மாள் என்பவருக்கும், கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. பாலமுருகன் சிங்கப்பூரில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார்.
திருமணம் முடிந்ததைத் தொடர்ந்து, மனைவி சந்தன மாரியம்மாளை அழைத்து சிங்கப்பூர் சென்று, அங்கேயே பாலமுருகன் வீடு எடுத்து தங்கி வேலை பார்த்துள்ளார். இதனையடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி கிருபை நகரில் பாலமுருகன் தனது பெயரில் ஒரு இடத்தை வாங்கி, அதில் வீடு கட்டி சந்தன மாரியம்மாளுடன் குடியிருந்து வந்துள்ளார்.
அதன்பின், தூத்துக்குடியிலுள்ள சொந்த வீட்டில் சந்தன மாரியம்மாளை தங்க வைத்து, பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. அங்கு வேலை பார்த்து பணத்தை தனது மனைவியிடம் கொடுத்துள்ளார்.
மேலும், பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து மனைவிக்கு ரூபாய் 10 லட்சம் மற்றும் 50 பவுன் தங்க நகை கொடுத்துள்ளார். இந்நிலையில், சந்தனமாரிக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கைத் துவங்கி, அதன் மூலம் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு, பல ஆண் நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, வெளிநாட்டு வேலையை விட்டு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பாலமுருகன் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, மனைவியிடம் தனது மருத்துவச் செலவுக்காக, தான் வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பிய பணம், நகைகளை என்ன செய்தாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு சந்தன மாரியம்மாள் உரிய பதிலளிக்காமல், நகை மற்றும் பணத்தைத் தர மறுத்துள்ளார்.