அரியலூர்:ஜெயங்கொண்டம் அடுத்த தேவாமங்கலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (42). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கற்பகவல்லி (36). திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், பத்தாண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த இவர்களுக்கு தற்போது கோமகன் (5) என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில், கற்பகவல்லிக்கு சிறுநீரகம் செயலிழந்தது தெரிய வந்துள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து மனைவிக்கு, கோபாலகிருஷ்ணன் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி கற்பகவல்லி உயிரிழந்துள்ளார். மனைவி இறந்த துக்கத்தில் மீளா துயரத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன், தனது வீட்டின் அருகில் உள்ள சொந்த நிலத்திலேயே மனைவியை நல்லடக்கம் செய்துள்ளார்.
கற்பகவல்லியின் இறுதி நிமிடங்களில், கோபாலகிருஷ்ணன் ’நீ என் குல சாமி, உன்னை நாங்கள் மறக்க மாட்டோம். என்னால் உன்னைக் காப்பாற்ற முடியாவிட்டால் உனக்காக கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவேன். ஊரையே உன்னை சாமியாக கும்பிட வைப்பேன்’ என்று கூறியதாக கூறப்படுகிறது.