தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் சித்ரா பௌணர்மியை முன்னிட்டு நேற்று சாமி தரிசனம் வந்த ஆயிரணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இதனால் அங்கு ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தால், தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் சண்முக விலாஸ் மண்டபம் முன்பு வைக்கப்பட்ட பேரிகார்டை தள்ளிவிட்டு உள்ளே புகுந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் சுவாமி கோயில், கடற்கரை அருகில் அமைந்துள்ளது. மேலும், சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. இதனால், நாளொன்றுக்கு இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். நேற்று அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுமார் 7 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.