தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீட்சிதர் விவகாரத்தில் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்? ஐகோர்ட் கேள்வி!

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் -கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் -கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 8 hours ago

சென்னை:சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி, கனகசபையில் பக்தர்களை தரிசிக்க உதவியதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி, நடராஜ தீட்சிதர் என்பவர் தீட்சிதர்கள் குழுவால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை விசாரித்த ஆணையர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பொது தீட்சிதர் குழுவும், அறநிலையத் துறை உத்தரவை அமல்படுத்த வேண்டும் நடராஜ தீட்சிதரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இதையும் படிங்க:கைதி துன்புறுத்தப்பட்ட வழக்கு; உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி!

இந்த வழக்குகள் நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் "உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நடராஜர் கோயிலை நிர்வகிக்க பொது தீட்சிதர்கள் குழுவுக்கே முழு அதிகாரம் உள்ளதாகவும், அதில் அறநிலையத் துறை தலையிட முடியாது. அதற்கு அதிகாரமும் இல்லை" என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "கோயிலை நிர்வகிக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்? எனக் கேள்வி எழுப்பினார்.

பின்னர், நடராஜ தீட்சிதரின் சஸ்பெண்ட் காலம் முடிந்து விட்டதாகவும், அவர் தில்லை காளியம்மன் கோயிலில் தீட்சிதராகத் தனது பணியை செய்து வருவதையும் சுட்டிக்காட்டி" இரு வழக்குகளையும் முடித்து வைத்தார். அதேசமயம் கோயில் நிர்வாகத்தில் அறநிலையத் துறை தலையிட அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதை கோயில் வழக்குகளை விசாரணை செய்யும் இரு நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வின் முடிவுக்கு விட்டு விடுவதாக நீதிபதி தண்டபாணி, தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details