சென்னை:சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கைத் தாக்கல் செய்யக் கோரி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (அக்.24) நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், "கோயில் நிலங்கள் எதுவும் தீட்சிதர்கள் வசம் இல்லை என்றும், எந்த நிலத்தையும் தீட்சிதர்கள் விற்கவில்லை என்றும், அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக அறநிலையத்துறை கூறும் குற்றச்சாட்டு துரதிர்ஷ்டவசமானது" என்றும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, கோயில் நிலங்கள் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் எனவும், நகைகள் அனைத்துக்கும் கணக்கு உள்ளது எனவும், ஒரு நகை கூட காணாமல் போகவில்லை. கடந்த 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை கோயில் கணக்கு வழக்குகள் குறித்த அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் பொது தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.