தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 5:11 PM IST

ETV Bharat / state

விவசாயம் படிக்க விருப்பமா? இன்று முதல் விண்ணப்பம் தொடங்கியது.. முழு விவரம்! - Online Application for Agri Courses

Online Application for Agriculture Courses: வேளாண் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பம் இன்று முதல் துவங்கப்படுகிறது. எனவே, ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, ஜூன் 6ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி புகைப்படம்
வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி புகைப்படம் (credits - ETV Bharat tamilnadu)

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் வேளாண் படிப்புகளுக்கான இணைய வழி விண்ணப்பம் இன்று முதல் தொடங்குகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வேளாண்மை இளமறிவியல், பட்டயப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்து விளக்கினார்.

அப்போது பேசிய அவர், “கோடை மழைப்பொழிவு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிகக் குறைவாக இருந்துள்ளது. நாளை முதல் மூன்று நாட்களுக்கு நல்ல மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். தென்மேற்கு பருவ கால மழைப்பொழிவு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக பயிர் அறுவடை செய்யலாம்” என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்துத்துப் பேசிய அவர், “120 ஆண்டுகால பழமை வாய்ந்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ், 18 உறுப்புக் கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் இயங்கி வருகிறது. கல்லூரிகளில் இளம் அறிவியல், டிப்ளமோ, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப இணையதளம் இன்று முதல் துவங்கப்படுகிறது.

அதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை tnagfi.ucanapply.com என்ற ஒரே இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, ஜூன் 6ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 14 படிப்புகளுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இரண்டு படிப்புகளுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் 9 படிப்புகளுக்கும், மூன்று விதமான டிப்ளமோ படிப்புகளுக்கும் மாணவர்கள் இந்த இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று கூறினார்.

இட ஒதுக்கீடு:இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீடும், அக்ரி வோகேஷ்னல் படிப்பு படித்தவர்களுக்கு 5 சதவீதமும், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடும் உள்ளது. இவை தவிர, விளையாட்டு பிரிவு மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கான இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு சீட் என தலா 20 சீட்டுகள் ஒதுக்கப்படுகிறது.

ரேங்க் பட்டியல்:ஆன்லைன் விண்ணப்பம் முடிந்த பிறகு, ரேங்கிங் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு மாணவர்கள் அந்தந்த பாடப்பிரிவில் சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ படிப்புகளுக்கு ரூ.200 விண்ணப்பக் கட்டணமும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணம் உள்ளது.

தொழில்நுட்ப பயிற்சிகள்:முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஜூன் 12ஆம் தேதியோடு விண்ணப்பம் செயல்முறை முடிவடைகிறது. இதற்கு அடுத்து நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான தேர்வு நடைபெறும்.

AI தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழ்நிலையில், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மைக்கான கருவிகள் ஆகியவற்றில் AI தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும், பழங்கள் மற்றும் காய்கறி அறுவடையிலும் ரோபோட்டிக் கருவிகள் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேலை வாய்ப்பு:வேளாண் படிப்புகள் முடித்தவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளிலும், குறிப்பாக வேளாண் துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, அக்ரி தொடர்பான அரசின் அமைப்புகள், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி, தர நிர்ணயம் என அக்ரி தொடர்பான வேலை வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

விவசாயிகளுக்கு பயிற்சி:மேலும், பொள்ளாச்சியில் ஏற்பட்ட இளநீர் தட்டுப்பாட்டுக்கான காரணங்களாக வறட்சி, வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் கேரள வாடல் நோய் ஆகியவை உள்ளன. இவற்றை எதிர்கொள்வதற்காகவும், நீர் மேலாண்மை குறித்தும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சிகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சிறுமியை நாய்கள் கடித்த விவகாரம்: வளர்ப்பு நாய்களுக்குக் கட்டுப்பாடு.. மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை! - Chennai Corporation Order For Dog

ABOUT THE AUTHOR

...view details