சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தின் உள்பகுதியில் உள்ள விமான நிலைய உணவகத்தில், ஒப்பந்த ஊழியராக பணியாற்றுபவர் அஜெய் (30). இவர் இன்று பணி முடிந்து செல்வதற்காக, சென்னை சர்வதேச விமான நிலையம் வருகைப் பகுதியில் உள்ள விமான நிலைய ஊழியர்கள் மற்றும் ட்ராலிகள் கொண்டு செல்லும் கேட் வழியாக வெளியில் வந்துள்ளார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள், அஜெய்யை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது, அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் அணிந்திருந்த ஷூக்களைக் கழற்றி பார்த்து சோதனை செய்து உள்ளனர். அப்போது, அவரது ஷூ சாக்ஸுக்குள், 4 சிறிய பாக்கெட்டுகள் இருந்துள்ளன.
அதை எடுத்து பிரித்து பார்த்தபோது, அதனுள் தங்கப் பசைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதை அடுத்து அஜெயையும், அவர் ஷாக்சஸுக்குள் மறைத்து வைத்திருந்த தங்கப் பசை அடங்கிய பாக்கெட்களையும், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் அஜெய்யை விசாரித்தபோது, அந்த 4 பாக்கெட்களிலும் ஒரு கிலோ 386 கிராம் தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகும். இதனையடுத்து சுங்க அதிகாரிகள் அஜெயை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி உள்ளனர்.
அப்போது, துபாயிலிருந்து நேற்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில், பயணி ஒருவர் இந்த தங்கப் பசை அடங்கிய பாக்கெட்டுகளை கடத்திக் கொண்டு வந்து, சர்வதேச விமான நிலையத்திற்குள் பணியில் இருந்த அஜெய்யிடம் கொடுத்துவிட்டு, வெளியில் சென்று உள்ளார்.
மேலும், அஜய் தனது ஷூ ஷாக்சஸுக்குள் தங்கப் பசை பாக்கெட்டுகளை மறைத்து வைத்து, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் கொண்டு போய், அந்த கடத்தல் பயணியிடம் கொடுக்க இருந்தது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து, துபாயிலிருந்து இந்த தங்கப் பசையை கடத்தி வந்து, தற்போது தலைமறைவாகி உள்ள அந்த கடத்தல் ஆசாமி யார் என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:கேரள போலீசால் தேடப்பட்ட நபர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்!