கரூர்:கரூரில் நேற்று குதிரைப் பந்தயப் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்போது, திடீரென வானிலை மாறி மழை பெய்த நிலையில், கொட்டும் மழையிலும் நடைபெற்ற குதிரை பந்தயத்தைக் காண வந்த ஏராளமான ரசிகர்கள், சீறிப்பாய்ந்த குதிரைகளையும், வீரர்களையும் உற்சாகப்படுத்தினர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு, திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்து வருகின்றனர். அந்த வகையில், கரூர் மாவட்ட திமுக சார்பில் மாநில அளவிலான குதிரை வண்டி எல்கை பந்தயம் நேற்று (ஜனவரி 19) ஞாயிற்றுக்கிழமை மாலை திமுக கரூர் மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.கே.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறிய மற்றும் பெரிய குதிரை மற்றும் புதிய குதிரை என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி (ETV Bharat Tamil Nadu) இந்த போட்டியில் கரூர், ஈரோடு, திண்டுக்கல், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குதிரை பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியானது கரூர் அரசு காலணி முதல் வாங்கல் வரை என சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. அப்போது திடீரென காலநிலை மாறி மழை பெய்துள்ளது. இருந்தாலும், கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் குதிரைப் பந்தயத்தைக் காண ஏராளமான ரசிகர்கள் பொதுமக்கள் சாலை ஓரமாகத் திரண்டு, உற்சாகப்படுத்தினர்.
கரூரில் கொட்டும் மழையிலும் நடந்த குதிரை பந்தயம் (ETV Bharat Tamil Nadu) இறுதியாக, குதிரைப் பந்தயப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை வழங்கினார். அதாவது, இப்போட்டியில் பெரிய குதிரை பிரிவில் கரூர் நவலடியான் குரூப்ஸ் குதிரை வண்டி முதல் பரிசாக ரூ.30,000 மற்றும் கோப்பையும், சிறிய குதிரை பிரிவில் திருச்சி உறையூர் விஜயா குதிரை ரூ.25,000 மற்றும் கோப்பையும், புதிய குதிரை பிரிவில் கரூர் பாரத் பஸ் கம்பெனி குதிரை வண்டிக்கு ரூ.20,000 பரிசுத்தொகையும், கோப்பையும் பெற்றது.
இதையும் படிங்க:வழுக்கு பாறையில் சாமி வழிபாடு.. ஆபத்தை உணராமல் சறுக்கி விளையாடும் சிறுவர்கள்!
முன்னதாக, கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் நடைபெற்ற குதிரைப் பந்தயப் போட்டியில் ஆர்வமாகக் கலந்து கொண்ட குதிரை பந்தய வீரர்களும், அதனைக் காண ரசிகர்களும் கூடியதால் கரூர் வாங்கல் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கரூர் நகரக் காவல் துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அமைச்சரிடம் பரிசு பெற்ற நபர் (ETV Bharat Tamil Nadu) மேலும், இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் கனகராஜ், தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசாமி, கரூர் வடக்கு நகர செயலாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் ஆர்வமாக வந்து, குதிரை பந்தயப் போட்டியை கண்டும், போட்டியில் பங்கேற்ற குதிரைப் பந்தய வீரர்களை உற்சாகப்படுத்தி ரசித்து மகிழ்ந்தனர்.