தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 1:23 PM IST

ETV Bharat / state

காதல் திருமணம் செய்த மகளின் கணவனை ஆணவக் கொலை செய்ய திட்டம்.. 10ஆம் வகுப்பு மாணவி பலியான சோகம்.. ஈரோடு பகீர் சம்பவம்!

Erode Honor Killing: காதல் திருமணம் செய்த மகளின் கணவரை கொலை செய்யும் முயற்சியில், அவரது தங்கையான 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Erangattur accident
எரங்காட்டூர் விபத்து

ஈரோடு: சத்தியமங்கலத்தில் மகள் வேற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்ட காரணத்தால், மருமகனை வேன் ஏற்றி கொலை செய்ய முயன்றதில் இளைஞரின் தங்கை உயிரிழந்துள்ளார். தற்போது இது ஆணவக்கொலையா? என்ற கோணத்தில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்தியமங்கலம் அருகே உள்ள எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த ஜெயபிரகாஷின் மகன் சுபாஷ்(24). இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் ஒன்றை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது 16 வயது தங்கை சத்தியமங்கலம் காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், சுபாஷ் தனது தங்கையை பள்ளியில் விடுவதற்காக ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அப்போது சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் எரங்காட்டூர் நெசவாளர் காலனி அருகே சென்று கொண்டிருந்தபோது, இவர்களது ஸ்கூட்டருக்கு பின்னால் அதிவேகமாக வந்த வேன் ஒன்று, சுபாஷின் ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது.

வேன் மோதியதில் அண்ணன், தங்கை இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளனர். அதில், சுபாஷுக்கு கால் தொடையில் எழும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அவரது தங்கைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சிறுமிக்கு சத்தியமங்கலத்தில் முதல் உதவி சிகிச்சை செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சுபாஷ் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதனையடுத்து இவ்விபத்து குறித்து தகவலறிந்து வந்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் விபத்தா? அல்லது கொலை முயற்சியா? என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்காக சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன் தலைமையில், பவானிசாகர் காவல் ஆய்வாளர் அன்னம் உள்ளிட்ட போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், "சுபாஷ் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்த போது சத்தியமங்கலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மகள் மஞ்சுவை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரிய வந்தபோது, இளைஞர் வேற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து இருவரும் குடும்பத்தினரை எதிர்த்து, 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மஞ்சுவின் தந்தை சந்திரன் மகளின் காதல் திருமணத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதற்கிடையே கடும் ஆத்திரத்தில் இருந்த சந்திரன் தனது மகளைக் காதல் திருமணம் செய்த சுபாஷை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இருந்து வந்ததாகத் தெரிகிறது. தற்போது மஞ்சு 4 மாத கர்ப்பிணியாக சுபாஷின் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) சுபாஷ் தனது தங்கையுடன் ஸ்கூட்டரில் சென்ற போது, வேனை வைத்து மோதி விபத்தை ஏற்படுத்தி கொலை முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அதில் எதிர்பாராத விதமாக, சுபாஷின் தங்கை தலையில் அடிபட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையே வேன் மூலம் விபத்தை ஏற்படுத்திய சந்திரன் மற்றும் விபத்து நடந்த இடத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்து சந்திரனை அழைத்துச் சென்ற அவரது மனைவி சித்ரா இருவரும் தலைமறைவாகியுள்ளனர். தற்போது தலைமறைவான இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றோம்" என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நேற்று பள்ளி மாணவி இறந்ததையடுத்து, விபத்தை ஏற்படுத்தி மருமகனைக் கொலை செய்ய முயன்ற மாமனார் சந்திரன் தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மற்றும் காருக்கு சிலர் தீ வைத்ததால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் இரு சமூகத்தினர் இடையேயான பிரச்சனையாக மாறிவிடக் கூடாது என்பதற்காக சத்தியமங்கலம் பகுதியில் சுமார் 20 போலீஸ் முகாம்கள் அமைக்கபட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதலில் இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் நாளை பந்த்..! சிறுமி கொலை விவகாரத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும் - இரா.சிவா

ABOUT THE AUTHOR

...view details