தருமபுரி: கர்நாடகா மற்றும் கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கர்நாடகா மாநிலத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் சமீபத்தில் முழு கொள்ளளவை எட்டியது. இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த கனமழை கடந்த இரு தினங்களாக குறைந்தது.
அதனால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நீர் வெளியேற்றுவதும் குறைந்தது. அதன் காரணமாக, இன்று காலை நிலவரப்படி, தமிழக எல்லை பகுதிக்கு வரும் நீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடிலிருந்து 25 ஆயிரம் கன அடி வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, இன்று காலை 8 மணி முதல் நீர்வரத்து திடீரென படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து காலை 25 ஆயிரம் கன அடியிலிருந்து பகல் நிலவரப்படி நீர்வரத்து 66 ஆயிரம் கன அடியாக திடீரென அதிகரித்துள்ளது. அதாவது, கேரள பகுதியில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியதன் காரணமாக, கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால் இன்று நண்பகல் 11 மணி நிலவரப்படி கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது.