தருமபுரி:கர்நாடக - கேரள மாநிலங்களில் கடந்த வாரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் முழுவதும் நிரம்பியது. இதனால் உபரிநீர் முழுவதும் காவிரியில் திறந்துவிடப்பட்டன. காவிரியில் நேற்று(வியாழக்கிழமை) தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு விநாடிக்கு 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் வந்தது.
இதன் காரணமாக ஊட்டமலை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையோரம் உள்ள வீடுகள் வரை தண்ணீர் அதிகரித்தது. மேலும், ஒகேனக்கல் பகுதியில் பல இடங்களில் தண்ணீர் வீடுகளை தொட்டுச் சென்றது. இந்நிலையில், இன்று காலை முதல் நீர்வரத்து குறைய தொடங்கியதால், நீர்வரத்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
காலை 10 மணி நிலவரப்படி நீர்வரத்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக தொடர்ந்து சரிந்துள்ளது. கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர்வரத்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.