தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலும் இந்து முன்னணி மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்துகொண்டார்.
சாதி கயிறுகளைத் தவிர்க்கக் கூறிய அறிக்கை; இந்து விரோத செயலா?:இது குறித்து தூத்துக்குடியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம், "திமுக அரசு இந்துக்களுக்கு விரோதமான அரசாக செயல்படுகிறது. பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் கயிறு கட்டக்கூடாது, விபூதி அணிந்து வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆய்வறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தாக்கல் செய்துள்ளார். ஆனால், சிலுவை போட்டு வரக்கூடாது, பர்தா அணிந்து வரக்கூடாது எனக் கூறவில்லை. இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் அவரை இந்து முன்னணி கண்டிக்கிறது.
உளவுத்துறை செயல்படவில்லை:தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகமாக இருக்கிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் (திமுக) தான் அதில், அதிகமாக ஈடுபடுகின்றனர். முதல்வரோடு நெருக்கமாக இருந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஜாஃபர் சாதிக்கிற்கு சர்வதேச அளவில் தொடர்புள்ளது. உளவுத்துறை சரியாக செயல்படவில்லை எனில், வருங்கால சந்ததியினர் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.
அதிமுக, பாமக தலைவர்கள் கொலை:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. காங்கிரஸ் மாவட்ட தலைவர், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதேபோல அதிமுக, பாமக என பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுபோன்று தினமும் ஒன்று முதல் இரண்டு கொலை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளதைக் காட்டுகிறது.