சென்னை:நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு நிறைவடைந்துள்ளது. அதற்காக, சென்னையில் பணிபுரிபவர்கள், சென்னையில் தங்கி கல்லூரி படிபவர்கள் மற்றும் சென்னையில் வசிப்பவர்கள் என சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தீபாவளி திருநாள் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்களை சொந்த ஊரில் கழிப்பதற்குப் படையெடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் தொடர் விடுமுறையை முடித்துக் கொண்டு நேற்று (நவ.3) மாலை முதல் லட்சக்கணக்கான மக்கள் அரசு பேருந்து மற்றும் சொந்த வாகனங்களில் சென்னையை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இதனால் நேற்று மாலை முதல் பரனூர் சுங்கச்சாவடி, வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.
மேலும், இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த வாகனங்களிலும், அரசு பேருந்துகளிலும் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதால் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னை திரும்பவும் பொதுமக்கள் வசதிக்காக காட்டாங்குளத்தூர் பகுதியிலிருந்து தாம்பரம் வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதையும் படிங்க:தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை; தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
அதனால், சென்னை நோக்கி வரும் மக்கள் பலர் காட்டாங்குளத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ரயில் மூலம் தாம்பரம் வருகின்றனர். ஆகையால், ரயில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. மேலும், ரயில்களில் அதிகப்படியான பயணிகள் வருவதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று மாலையிலிருந்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், மறைமலைநகர், கூடுவாஞ்சோரி, காட்டாங்குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கு மேற்பட்ட போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாம்பரம் ரயில் நிலையம் வரும் மக்கள், ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி தாம்பரம், குரோம்பேட்டை பேருந்து நிலையத்திற்கு சென்று புறநகர் பேருந்துகளில் தங்கள் பகுதிகளுக்கு செல்வதால் பேருந்து நிலையத்திலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல, தஞ்சையிலிருந்து செல்லும் மக்கள் வசதிக்காக கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் போதிய பேருந்து வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை செல்வதற்கு 32 ரெகுலர் அரசு பேருந்துகள், 32 சிறப்பு அரசு பேருந்துகள், 10 தனியார் பேருந்துகள் என மொத்தம் 74 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை செல்வதற்காக நேற்று மாலை 6 மணியிலிருந்து பொதுமக்கள் மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் குவியத் தொடங்கினர். அதனால், மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலை மோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்தி திருட்டு, வழிபறி போன்ற குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்