திருநெல்வேலி: தெற்கு வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில வாரமாக கடுமையான வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் பனிக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. இதனால் அனல் தாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
திருநெல்வேலியில் கொட்டித் தீர்த்த கனமழை (ETV Bharat Tamil Nadu) இந்நிலையில் வானிலை மையம் அறிவிப்பை தொடர்ந்து இன்று (பிப்.26) நெல்லை மாவட்டத்தில் வெப்பம் குறைந்து காணப்பட்ட நிலையில், பிற்பகலில் திடீரென மாநகரின் பல பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக, பாளையங்கோட்டை மார்கெட், சமாதானபுரம், தெற்கு பஜார், புதிய பேருந்து நிலையம், கே.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை முதல் மிக பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
வண்ணாரப்பேட்டை, கொக்கிரகுளம் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. பகல் நேரத்திலேயே வாகனங்கள் மின்விளக்குகளை ஒளிரச் செய்தபடி சென்றன. மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் தொடர்த்து சில மணிநேரத்துக்கு மழை நீடித்தது. திடீரென பெய்த கனமழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் நெல்லை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய LED பல்பின் பாகம் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!
தொடர்ந்து வரும் மார்ச் இரண்டாம் தேதி வரை தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் கடும் வெயில் மக்களை சுட்டெரித்தது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டைவிட வெயில் தாக்கம் கூடுதலாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ள நிலையில், தற்போது பெய்து வரும் கோடை மழையால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சுவர் இடிந்து விழுந்து விபத்து: இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் பெய்த கனமழையால் அங்குள்ள தனியார் கட்டிடத்தின் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்தது. போக்குவரத்து மிகுந்த சாலையாக இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. சுவர் இடிந்து விழுந்ததை தொடர்ந்து சாலையில் போக்குவரத்துக் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் சம்பவ இடத்தை போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து போக்குவரத்தை சரி செய்தனர். இதனிடையே முன்னெச்சரிக்கையாக அந்த கட்டடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பலத்த மழையில் கட்டடம் மிகவும் பழமையானது என்பதால் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.