தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு அலுவலகங்களில் ஊழல்; அரசின் நிலைப்பாடு என்ன? - நீதிமன்றம் கேள்வி! - MADRAS HIGH COURT

அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2024, 4:34 PM IST

சென்னை:புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர் சிறையில் பார்த்த வேலைக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் 14 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கை துறை கூறியது தொடர்பாக செய்தி தாள்களில் வெளியான செய்தியை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி அறிக்கையை தாக்கல் செய்தார்.

அறிக்கையை பார்த்த நீதிபதிகள், முறைகேடு தொடர்பாக 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய தணிக்கைக்குழுவின் அறிக்கை வெளியான நிலையில் கடந்த 13-ஆம் தேதி தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது? இவ்வளவு நாட்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? இது போன்ற புகார்களை அரசு தீவிரமாக எடுத்துக்கொள்கிறதா? என கேள்வி எழுப்பினர். தவறிழைத்த அதிகாரிகள் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டு ஓய்வுபெற அனுமதிக்கக்கூடாது எனவும், இதுபோன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினர்.

இதையும் படிங்க:அசோக் நகர் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு!

இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், 2022-ஆம் ஆண்டு மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை வெளியானதிலிருந்து, அதுதொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு தற்போது , அதன்பின்னர் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஊழல் புகார்களை அரசு தீவிரமாக கருதுவதாகவும் உறுதி தெரிவித்தார். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details