மதுரை: திருச்சியைச் சேர்ந்த அல்லூர் சீனிவாசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சி நகர் பகுதிகளில் ஜவுளி கடைகள், நட்சத்திர ஓட்டல்கள், ஷாப்பிங் மால்கள் என பொதுமக்கள் அதிக அளவில் கூடும் வணிக நிறுவனங்கள் ஏராளமானவை உள்ளன. இந்த இடங்களில் கட்டட விதி மீறல்கள் உள்ளன. மேலும், இங்கெல்லாம் அவசர கால மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
மேலும், இதுபோன்ற கட்டட விதி மீறல்கள் உள்ள வணிக கட்டடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறும் நிலையும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தனியார் ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள், ஷாப்பிங் மால்களில் ஆய்வு நடத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இதையும் படிங்க:பழனியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு நிபந்தனையுடன் அனுமதி - மதுரைக் கிளை உத்தரவு!
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டட விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது? என கேள்வி எழுப்பி இருந்தது. இந்த நிலையில், கட்டட விதி மீறல்கள் தொடர்பான இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "கட்டட பாதுகாப்பு விதிகளின்படி அனுமதி பெற ஏற்கனவே விண்ணப்பித்த தனியார் நிறுவனங்கள், அதுதொடர்பான விவரங்களை திருச்சி மாநகராட்சியிடம் ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல, முறையான வசதிகள் இல்லாத, அனுமதி பெற விண்ணப்பிக்காத மற்ற கட்டடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும். அங்கு விதிமீறல்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது 12 வாரத்திற்குள்ளாக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.