சென்னை:கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வரும் தலைமை மருத்துவர் பாலாஜி ஜெகந்நாதன், என்பவரை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் (25) இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். இதன் பின்னர் மருத்துவமனை வளாகத்திலிருந்து விக்னேஷ் வெளியேற முயன்றுள்ளார்.
இதனை கண்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அலுவலக கண்காணிப்பாளர் முத்து ரமேஷ், வெளியேற முயன்ற விக்னேஷை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில்," மருத்துவமனையின் இயக்குநர் அறையில் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது மருத்துவர் ஒருவர் வந்து புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திவிட்டதாகத் தெரிவித்தனர். உடனடியாக அவரது அறைக்கு ஓடினேன். அப்போது அவரை குத்தியவர் கையில் கத்தியுடன் தப்பித்து செல்லப்பார்த்தாா்.
கத்தியால் குத்தியவரை மடக்கி பிடித்த ஊழியர்கள் (Credit - ETV Bharat Tamil Nadu) இதனையடுத்து அவரை மடக்கி பிடித்தேன், மேலும் ஒரு மருத்துவர் வந்து அவரை பிடித்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் வந்து மருத்துவர் பாலாஜியை குத்தியவரைப் பிடித்துச் சென்றனர். மருத்துவர் பாலாஜிக்கு கழுத்து உள்ளிட்ட பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதால் ரத்தம் வந்துக் கொண்டிருந்தது.
இதையும் படிங்க:மருத்துவரை கத்தியால் குத்தியது ஏன்? இளைஞர் விக்னேஷ் பரபரப்பு வாக்குமூலம்!
அவரை உடனடியாக அறுவை அரங்கிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தோம். தற்பொழுது நன்றாக உள்ளார். இளைஞரை மடக்கி பிடித்தபோது சட்டையில் சில துளி ரத்தம் பட்டுள்ளது. மேலும் மருத்துவர் பாலாஜி நோயாளிகளிடம் நன்றாகப் பழகக்கூடியவர். பிற மருத்துவர்கள் கேட்பதற்கும் பதிலளிப்பார்" என தெரிவித்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விக்னேஷ் கைது செய்து கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.