சென்னை: வடசென்னை பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடமாநில நபர்கள் குழந்தைகளைக் கடத்துவது போன்றும், ஒரு குழந்தையை கடத்திச் சென்று விட்டதாகவும் சில வீடியோக்கள், ஆடியோக்கள் whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வந்தன.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், குழந்தைகள் கடத்துவது போன்று பரப்பப்பட்ட வீடியோ போலியானது என தெரிய வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக போலியான வீடியோக்கள், ஆடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரப்புவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கையில், “சமீப காலமாக சில நபர்கள் குழந்தைகளைக் கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது போன்ற காணொலிகள் மூலம் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டுமென்ற பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வருகின்றன. இது போன்ற போலியான செய்திகளை கேட்டோ, காணொலிகளை பார்த்தோ பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதற்றமடையவோ தேவையில்லை.