திருப்பத்தூர்:சென்னையிலிருந்து திருப்பத்தூருக்கு பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 30 அடி விவசாய நிலத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயுள்ளது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சென்னையில் இருந்து திருப்பத்தூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று இன்று (ஜனவரி 17) வெள்ளிக்கிழமை புறப்பட்டுள்ளது.
இந்த பேருந்து, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் பகுதியில் வந்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 30 அடி விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயுள்ளது. இந்த விபத்தில், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 10 பேர் காயமடைந்துள்ளனர்.