சென்னை:தமிழ் மொழி மிகவும் பழமையான மற்றும் தொன்மையான மொழி எனவும், அதனை அனைவரும் கற்று தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், ஐஐடி மாணவர்கள் தயாரித்து வரும் மொழி பெயர்ப்பு செயலி மூலமாக இனிவரும் காலங்களில் மொழி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 16-வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி துவக்க விழா நேற்று (பிப்.8) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்றுத் தொடங்கி வைத்தார். அப்போது, இந்நிகழ்வில் மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த பழங்குடி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதுமட்டுமின்றி பழங்குடியினர் பாட்டுக்கு மாணவர்களுடன் ஒன்றாக இணைந்து ஆளுநர் நடனமாடின நிகழ்வும் நடந்துள்ளது.
அதனையடுத்து, கல்லூரி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களின் எதிர்கால கனவுகள் குறித்துக் கேட்டறிந்தார். அப்போது, தமிழ் மொழியைக் குறித்து கேள்வி கேட்ட கல்லூரி மாணவிக்கு, பதில் அளித்த ஆளுநர், "தமிழ் மொழி மிகத் தொன்மையான, பழமை வாய்ந்த மொழி. ஒவ்வொருவரும் தமிழ் மொழியில் பத்து வார்த்தைகளையாவது கற்றுக்கொள்ள வேண்டும்" எனப் பதில் கூறினார்.
தொடர்ந்து, அரங்கத்தில் ஒரு மாணவன், "நான் எதிர்காலத்தில் அரசியல்வாதியாக மாறுவேன்" எனக் கூறினான். அதற்கு ஆளுநர் நீங்கள் ஏன் அரசியல்வாதியாக விரும்புகிறார்கள்? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த மாணவன், "தற்போது எங்கள் கிராமங்களில் போதிய அளவுக்கு வளர்ச்சி இல்லை. ஆகையால் நான் எதிர்காலத்தில் அரசியல்வாதி ஆனால், என் மக்களுக்கும் என் கிராமத்திற்கும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்" என்று பதிலளித்தார்.
"நான் படிக்கும் காலத்தில் மின்சார வசதியும் இல்லை. எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று தான் பள்ளிப் படிப்பை படித்ததாகவும், அப்பொழுது நாடு பெரிதாக வளர்ச்சியடையவில்லை. ஆனால் தற்போது கிராமங்களில் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கிறது என்ற ஆளுநர், யாரெல்லாம் மருத்துவராக வேண்டும் என விருப்பப்படுகிறீர்கள் என கேள்வியெழுப்ப ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மாணவர் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டேன்" எனப் பதிலளித்தார்.