சென்னை: கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் "தூய்மையே சேவை" என்ற தலைப்பில் மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்களுடன் இணைந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
முன்னதாக, காந்தி மண்டப வளாகத்தில் உள்ள காந்தி சிலையை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த ஆளுநர், பின்னர் அங்கிருந்த படிக்கட்டுகளையும் சுத்தம் செய்தார். பின்பு வளாகத்தில் இருந்த பிளாஸ்டிக், அலுமினியம், பேப்பர் உள்ளிட்ட குப்பைகளை கையுறைகளை அணிந்தவாறு ஆளுநர் தூய்மைப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் 150க்கும் மேற்பட்டோர் தன்னார்வலராக பங்கேற்று காந்தி மண்டபத்தை தூய்மைப்படுத்தினர். தூய்மை, சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். காந்தி மண்டபத்தை சுத்தம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் ரவி, “தூய்மை என்பது நம் பழக்க வழக்கங்களில் ஒன்றாக உள்ளது. நம் நாட்டில் உள்ள சட்ட திட்டங்களைப் பின்பற்றுவதில் பொதுமக்கள் மெத்தனப் போக்குடன் உள்ளனர்.
இதையும் படிங்க:மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்.. பழனி பஞ்சாமிர்தம் விவகாரத்தில் ஐகோர்ட் அமர்வு உத்தரவு!
வீடுகளை சுத்தமாக வைத்திருந்தாலும், பொது இடங்களை அசுத்தப்படுத்துகிறார்கள், இது நல்லதல்ல. இது நாகரீகமான சமூகத்தை எடுத்துரைக்கும் செயலல்ல. சுத்தமின்மை, அதிக நோய் ஏற்பட வாய்ப்பாக அமையும், இதனால் விளிம்பு நிலை மக்கள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள்.
இது ஒரு நாள் நிகழ்வு மட்டுமல்ல, மகாத்மா காந்தியின் பிறந்தநாளுக்காக இதை செய்யவில்லை. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் என்னுடைய அறிவுரை என்னவென்றால், குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது பல்கலைக்கழக வளாகங்களில் இதுபோன்ற தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
நான் கூட இதில் ஒரு சிலருடன் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் பழக்கவழக்கங்களில் ஒன்றாக இவற்றை மாற்ற வேண்டும். இந்த ஒரு நாள் வெறும் உதாரணம் தான். இதன் மூலம் நம் அன்றாட வாழ்வில் சுத்தமாக இருப்பதை பழக்கமாக முயற்சிக்கிறோம். பொது இடம் என்பது அனைவருக்குமானது. ஆனால், அதே காரணத்தால் பொது இடங்களில் அசுத்தப்படுத்துவது நல்லதல்ல.
காந்தி மண்டப வளாகத்தில் பல வகையான பாட்டில்கள் குறிப்பாக, மது பாட்டில்கள் இருப்பதைக் கூட பார்க்க முடிந்தது. அது காந்தியின் கொள்கைகளுக்கு எதிரானது, இதை பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமளிக்கிறது" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்